Sunday, August 24, 2014

வேலை பார்க்கும் இளம் பெண்களுக்கு....

பொதுவாக இன்றைய காலத்தில் பெண் பிள்ளைகள் பெரும்பாலும் படித்து முடித்ததும் பெரு நகரத்தில் நல்ல வேலை கிடைத்து, ஹாஸ்டல் அல்லது நான்கைந்து பேர் சேர்ந்து வீடு எடுத்துத் தங்கி, வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்களின் வேலை நேரம் போக மீதி நேரத்தை பயனுள்ளதாக அமைத்துக் சில ஐடியாக்கள்...
  • காலை சென்று மாலை (9 to 6 day time job without shift) திரும்பும் பெண்கள், தாங்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் அல்லது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள நல்ல tailoring workshop இருந்தால், அங்கே உங்களுக்கு விருப்பம் உள்ள embroidery, stitching, அல்லது ஜம்கி வேலைகள், குரோசே வேலைகள் கற்றுக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு படிப்பதில் ஆர்வம் இருந்தால் பக்கத்தில் இருக்கும் பப்ளிக் லைப்ரரியில், membership card வாங்கி பிடித்த புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம். 
  • எளிமையான அதே சமயம் உபயோகமான (உங்கள் வேலை சம்பந்தமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை) கம்ப்யூட்டர் கோர்ஸ், Photoshop, graphics, போல எதாவது கற்றுக் கொள்ளலாம். உங்கள் வீட்டு விசேஷத்தில், அல்லது tour போகும்போது எடுக்கும் போட்டோக்களை, நீங்களே அழகாக வடிவமைத்து, உங்கள் வீட்டினரை அசத்தலாம் (முக்கியமாக திருமணத்திற்குப் பின்). அவர்களுக்கும் மகிழ்ச்சி, உங்களுக்கும் கூடுதால் சந்தோஷம்.
  • எதாவது சமையல் வகுப்புகள் (cooking class) சென்று புதிது புதிதாகக் கற்றுக்கொள்ளலாம். இது இன்றையப் பெண்களுக்கு மிகவும் உதவக் கூடியது. திருமணம் ஆன பின் மிகவும் தேவைப்படக் கூடிய, பயன்படக் கூடிய ஒன்று. 
  • அழகு நிலையம் சென்று உங்களை நீங்களே எப்படி சரியாக இடத்திற்கேற்ப, அழகுப் படுத்திக் கொள்வது (presentable) என்று கற்றுக் கொள்ளலாம். நீங்கள் தினமுமோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ, அரைமணி, ஒருமணி நேரம் என உங்கள் விருப்பம் போல கற்றுக் கொள்ளலாம்.
  • Drawing, Painting, Sewing, Crafting, Mehandi, Decorations, Dance, Music, என உங்களுக்கு எதில் ஆர்வமோ அதைக் கற்றுக் கொள்ளலாம். 
தினமும் அல்லது வார இறுதியில் ஒரு மணி நேரம் சென்று கற்றுக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கே உங்களுக்கு என்று கிடைத்திருக்கும் பொன்னான நேரம் இது மட்டும்தான். படிக்கும் காலத்தில், படிப்பதற்கே நேரம் முழுவதும் போய்விடும், திருமணத்திற்கு பின், இது போலவெல்லாம் கற்றுக் கொள்ள நேரமும், சூழ்நிலையும் அமையாமல் போகலாம். அதனால், உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ள, வடிவமைத்துக் கொள்ள, உங்கள் திறமைகளை வெளிக்கொணர, இதுதான் சரியான . காலம்.
புதிது புதிதாக கற்றுக் கொள்ளும்போது, உங்களுக்கு எப்போதுமே போர் அடிக்காது. அதனால் உங்கள் மனம் வேறு எந்த சிந்தனையிலும் ஈடுபடாது. உங்கள் வேலைப் பளுவின் "tension, stress" குறைய மிகச் சிறந்த வழி இது. எடுத்துக்காட்டாக, நீங்களே உங்கள் கையால் நீங்கள் கற்றுக் கொண்ட கலை மூலம் ஒரு "sweater" தைத்து உங்கள் அண்ணன் மகளுக்கோ, அக்கா குழந்தைக்கோ கொடுத்தீர்கள் என்றால், நினைத்துப் பாருங்கள், அவர்கள் எவ்வளோ மகிழ்ச்சி அடைவார்கள். என் தங்கை வேலைக்கு போய்கிட்டே, கிடைக்கற நேரத்தில் இதை பின்னிக் கொடுத்தாள்ன்னு வாழ்க்கை முழுவதும் பத்திரமாக, உங்கள் நியாபகார்த்தமாக வைத்திருப்பார்கள். உங்களுக்கும் உங்கள் நேரத்தை உபயோகமாக பயன்படுத்திய, அதே சமயம் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்திய திருப்தி கிடைக்கும்.
தோழிகளோடு பேசி, சிரித்து, டிவி பார்த்து, மகிழ்ச்சியைக் கொண்டாடும் அதே சமயம் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதையும் திட்டமிட்டு கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை முழுதும் அந்தக் கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் உங்கள் கூடவே வரும். 

Friday, August 22, 2014

கொஞ்சம் கதை பேசலாம் - 2

மழைக் காளானும் குமுட்டியும்

நல்ல மழை பெய்தால் வரப்பு ஓரங்களில் மொட்டு மொட்டாக காளான்கள் முளைக்கும். மழைப் பெய்த அடுத்த இரண்டு மூன்று நாட்களில், ஈரம் காய்வதற்கு முன்னே, கொஞ்சம் மேடான வரப்போரங்களில், ஓடைக் கரையில், வாய்க்கால் பகுதிகளில், ஒன்று இரண்டு காளான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, முட்டிக் கொண்டு வரும். அது முளைத்த அன்றே பறித்தால் தான் உண்டு, இல்லையென்றால், விரிந்து,  புழு வந்து அழுகிவிடும். அதனால், மழை பெய்த அடுத்தடுத்த  நாட்களில், காலையில் எழுந்ததும் முதல் வேலையே இந்த காளான் வேட்டை தான். வரப்பு, வாய்கால்ன்னு சுத்தி அலைஞ்சு, எங்காவது காளான் முளைச்சிருக்கான்னு பார்ப்பேன். நான்தான் அப்படின்னு நினைச்சுடாதிங்க, எங்க வீட்ல எல்லாருமே அப்பப்போ தேடி பிடிச்சு, காளான்கள் கொண்டு வருவாங்க.  நிறைய காளான்கள் கிடைத்தால், நல்லா உப்பு ஓரப்பா காளான் குழம்பு வெச்சுத் தருவாங்க. சூப்பரா இருக்கும். ஒன்னு ரெண்டுன்னா, இரும்புக் கரண்டியில ஒடச்சுப் போட்டு வணக்கிக் (வதக்கி) தருவாங்க. இப்போ பட்டன் காளான் வாங்கி சமைக்கற ஒவ்வொரு முறையும், ஆசை ஆசையா அலைஞ்சு திரிஞ்சு வரப்பு வாய்க்கால்ன்னு தேடித் தேடி, காளான் கொண்டு வந்தது தான் நியாபகம் வரும். அது என்னமோ தெரியல, அப்போ சாப்பிட்ட காளான் குழம்பு  தான் இப்போ வரைக்கும் ஆஹா ஓஹோன்னு சொல்ல வைக்குது.
அப்புறம் குமுட்டி செடிங்க... குமுட்டிக் கீரை பேரைக் கூட இப்போதைய தலைமுறை பிள்ளைகள் கேட்டிருக்க மாட்டாங்க. இதுவும் மழை காலத்தில் மட்டுமே முளைக்கும். அதுவும் நீர் பாசனம் அல்லாத மேட்டுகாட்டு நிலத்தில் தான் அதிகம் முளைக்கும். எங்க அம்மா சீலைத் தலைப்புல பை மாதிரி முடிந்து, அதுலதான், அப்படியே பச்சை பசேல்ன்னு இளசா இருக்க கொழுந்துக் கீரையா பார்த்து பார்த்து பறிச்சிட்டு வருவோம். குமுட்டி, பண்ணைக் கீரை பறிக்கறதுக்குன்னே ஒரு gang சுத்திக்கிட்டிருக்கும். எங்க வீட்டுல அப்போல்லாம் கம்பஞ்சோரும் குமுட்டிக் கடைசளும் தான் காம்போ (combo). சும்மா சொல்லக்கூடாது, அம்புட்டு ருசியா இருக்கும்.
இப்பொல்லாம் மழையும் சரியா பெய்யறது இல்ல, காளானும், குமுட்டியும் முளைக்கறதே இல்ல. காட்டு நிலங்கள்ள பூச்சு மருந்த தெளிச்சு தெளிச்சு, கொஞ்ச கொஞ்சமா இயற்கையை கொன்னுக்கிட்டு இருக்கோம். பத்தாததுக்கு இந்த gadget-டுகல்...
குமுட்டி (மண்) அடுப்பில் சமைத்து, குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து, வாழை இலை போட்டு, அரட்டை அடிச்சிட்டே சாப்பிட்டு, ஒரு சின்ன விஷேசம்னா கூட கோழி அடிச்சு குழம்பு வெச்சு, எல்லாருமா சேர்ந்து கலகலன்னு, சந்தோசத்த கொண்டாடின காலம் போய், 24/7 gadgets -சோடு புழங்கி, மொபைலும், tab-ம், லப் டாப்பும் தான், நம் குடும்பமாக மாறி, சாப்பிடும்போதும் தூங்கும்போதும் கூடவே இருந்து, நம் சந்தோசத்தையும் துக்கத்தையும் தீர்மானிக்கும், உணர்வுமாகி நம்மை இயக்கும் நிலை வந்துவிட்டது. மனிதனுக்கும் மனிதனுக்குமான பேச்சும், உறவும் குறைந்து போய், மனிதனுக்கும் மெசினுக்குமான உறவு பலப்பட்டு விட்டது.
இப்படியே போனால் நம் பிள்ளைகளுக்கு உறவினர்களும், உறவுகளும் என்னவென்றே தெரியாது, புரியாது போய்விடும்.
இப்போதே தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, மாமா, என எல்லா உறவுகளையும் "skype"-ல் தான் காட்டி சொல்லிக் கொடுக்கிறோம். ஆடு மாடு, கோழி என எல்லாவற்றையும் கார்ட்டூனாக மட்டுமே காட்டுகிறோம். இந்நிலை தொடர்ந்தால், அம்மா-அப்பாவைக் கூட வெறும் "gadget" ஆக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் நம் பிள்ளைகள்.
மாற்றம் என்பது நம்மிடம் இருந்துதான் வர வேண்டும். பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, இனி நம் உறவுகளுக்கு கொடுப்போம். 
சுற்றமும் நட்பும் சூழ இயற்கையோடு ஒன்றி இனிதாக வாழ முயற்சிப்போம். 

Thursday, August 14, 2014

கொஞ்ச நேரம் கதை பேசலாம்...

திண்ணைப் பேச்சு 

எங்கள் தாத்தா வீடு அந்த காலத்தில் கட்டிய பழைய ஓட்டு வீடு. நெட்டாக நான்கு அறைகள் இருக்கும். நடுவிலிருக்கும் ஹாலை "பட்டா சாலை" என்று அழைப்போம். பட்டாசாலைக்குள் நுழைய இரண்டு வாசற்படி வைத்து, அடுத்தார் போல கதவோடு கூடிய மர  நிலவுக்கால் வைக்கபட்டிருக்கும். கதவின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய ஆளுயர ஜன்னல் இருக்கும். ஜன்னல் முழுவதும் பூப்போட்ட கம்பிகள் மட்டுமே இருக்கும், கதவு கிடையாது. வாசற்படியை ஒட்டி இரண்டு பக்கமும் வீட்டின் முழு நீளத்திற்கு திண்ணை வைக்கப் பட்டிருக்கும். இரு பக்கமும் ஜன்னலுக்கு அடுத்தாற்போல, இரண்டிரண்டு விளக்கு மாடங்கள் இருக்கும். பெரிய கட்டிட வேலைப்பாடு எல்லாம் கிடையாது என்றாலும், நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும். அந்த வீட்டோட சிறப்பே அந்த பெரிய திண்ணை தான். நாங்க பொதுவா வீட்டுக்குள்ள இருக்கறத விட இந்த திண்ணையில தான் அதிகமா புழங்கி இருப்போம். யாராவது ஒரம்பரை (விருந்தினர்) வந்தா கூட நாற்காலியெல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க, டக்குனு திண்ணையில ஏறி உட்கார்ந்துடுவாங்க.
வீட்டுக்கு முன்புறம் பெரிய மண் வாசல் இருக்கும், அடிக்கடி எங்க ஆயா மாட்டு சாணத்த தண்ணியில குழம்பு போல கரைச்சு வாசல வழிப்பாங்க. அது ரொம்ப கஷ்டமான இடுப்பொடியற வேலை. பெரிய வாசல முழுதுக்கும் வழிச்சுட்டு, சிலசமயம் முடியாம திண்ணையில படுத்துப்பாங்க, நான் தான் அப்போதைக்கு ஆயாவோட iodex, jandu balm  எல்லாம். குப்புற படுத்து, என்னை ஏறி மிதிக்க சொல்வாங்க. நங்கு நங்குன்னு நான் மிதிக்கற மிதியில, எங்க ஆயாவுக்கு வலி குறையுதோ இல்லையோ, எனக்கு நல்லா கால் வலி எடுத்துடும்.
ராத்திரி ஆனா எல்லாரும் வாசல்ல நிலா வெளிச்சத்துல வரிசையா ஆளுக்கொரு கட்டில போட்டு கதை பேசிகிட்டே படுத்திருப்போம். நானும் ஆயாவும் பாதி நேரம் வரைக்கும் கதை பேசிட்டே இருப்போம். அவங்க சின்ன புள்ளையா இருந்தப்போ இருந்து ஆரம்பிச்சு அவங்க கடைசி காலம் வரைக்கும் நடந்த அத்தனை கதைகளையும் சொல்வாங்க. நிலா வெளிச்சத்துல நச்சத்திரங்கள என்னிகிட்டே ஹாயா கதை கேட்டுகிட்டே தூங்கின அந்த காலம் திரும்பவும் கிடைக்குமான்னு தெரியல.
எங்க ஆயா சின்னதுல இருந்தே சொப்புத் தயிர் வியாபாரம் பண்ணவங்க. சொப்புன்னா நம்ம வீட்டுல தண்ணீர் சோம்பு இருக்கும்ல, அது மாதிரி மண்ணுல செஞ்சது. கால்படி சொப்பு, அரைப்படி சொப்புன்னு, அளவிற்கு தகுந்தாற்போல நிறைய சொப்புகள் இருக்கும். சமையல் கட்டுக்குள்ள, நாலைஞ்சு உரியில வரிசை வரிசையா சொப்பு சட்டிங்க தொங்கிட்டிருக்கும். ஒன்னுல பால், ஒன்னுல தயிர், ஒன்னுல மோர், ஒன்னுல வெண்ணைன்னு, பார்க்கவே கலக்கலா இருக்கும். உள்ள போனாலே புது மோர், பச்சை வெண்ணை வாசனை கலவையாய் வந்து ஆளைத் தூக்கும். எனக்கும் என் கிளுஸ் பூனைக்கும் அங்கதான் வேலையே. :-)
தினமும் பொழுது விடியறதுக்குள்ள மோர் சிலுப்பி, பெரிய கூடையில அடுக்கி வெச்சு, தலையில தூக்கிட்டு, கிட்டத்தட்ட 3 மைல் தூரம் நடந்தே போய் ஊருக்குள்ள, ஒவ்வொரு வீட்டுக்கும் தயிர் ஊற்றிட்டி வருவாங்க. வரும்போது எனக்கு மறக்காம உருண்டை பன்னு (round bun) வாங்கிட்டு வருவாங்க. நான் ஒரு நாளும் பார்த்தது இல்ல அவங்க எந்நேரம் எழுந்து இத்தனை வேலையும் செய்வாங்கன்னு. இதெல்லாம் நான் ரொம்ப சின்னதா இருக்கப்போ நடந்தது, பொறவு, அத நிப்பாட்டிட்டாங்க. உருண்டை பன்னும் போச்சு :-(
என்னைக்காவது மழை வந்தா ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் மழை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரே பரபரப்பா இருக்கும். ஆடு மாடெல்லாம் மழையில நனையக் கூடாதுன்னு, கட்டுத்தரையில இருந்து எல்லாத்தையும் அவிழ்துட்டு போய் மாட்டுக் கொட்டகைக்குள் கட்டுவாங்க. நானும் என்னமோ பெருசா வேலை செய்யற மாதிரி காட்டிகிட்டு, மழையில நனைஞ்சிட்டு இருப்பேன்.
மழை நேரத்துல ஓட்டு வீட்டோட பெரிய அழகே, ஓட்டின் மேல் விழுந்த நீரெல்லாம் சேர்ந்து சிறு ஓடைப் போல கீற்றுக் கீற்றாக வரிசையாக ஊற்றுவதுதான். கொட கொடன்னு ஒரே மாதிரி நெட்டாக ஊத்தறதப் பாக்கணுமே... சான்சே இல்லங்க, அவ்வளோ அழகா இருக்கும். மண் வாசலுங்கரதால, ஓட்டுத் தண்ணி ஊற்ற ஊற்ற, அது ஊற்றுகிற இடத்தில் மண் அரித்து போய், சிறு பள்ளம் ஏற்பட்டு, ஒரு சின்ன வாய்கால் போல தண்ணி தேங்கி நிற்கும்.  மழை நின்னப்பிறகும், சொட்டு சொட்டா, தேங்கின தண்ணியில  டப் டப்ன்னு விழுந்து அலை அலையா எழும்பும். திண்ணையில உட்கார்ந்து எல்லாரும் வரக்காப்பி குடிச்சிகிட்டு, கதை பேசிகிட்டே மழையையும் ரசிச்சிட்டிருப்போம். நான் காகித கப்பல் செஞ்சு அதுல விட்டு விளையாடுவேன். மழை நின்னபிறகும் என்னோட ஆட்டம் மட்டும் நிக்காது. ஓடிப் போய் ஒவ்வொரு மரமா, செடியா, உலுக்கி குலுக்கி, இலையில தேங்கியிருக்கிற நீரெல்லாம் ஒட்டுமொத்தமா சர்ருன்னு கீழே கொட்ட வெச்சு சில்லுனு நனைவேன்.
இந்த மாதிரி ஒவ்வொரு விஷயமும் ரசனையாதான் அப்போதெல்லாம். நம்ம எல்லாருமே இப்படிதானே இருந்தோம், எல்லாமே நமக்கு கொண்டாட்டமா தானே இருந்தது அந்த வயதில், வளர வளர இதெல்லாம் எங்கே போய் மறைந்தது. வாழ்கையின் சின்னச் சின்ன சந்தோசங்களையும், ரசனைகளையும், கொண்டாட்டங்களையும் தொலைத்துவிட்டு, எதைத் தேடி ஓடுகிறோம்...????? இந்த ஓட்டம் திரும்பவும் பழைய கொண்டாட்டமாக மாறுமா...??? ஆவலுடன்...

Tuesday, August 5, 2014

திருட்டுத் தீனி...

சின்ன வயசுல காசு திருடி மாட்டிய அனுபவம் உண்டா உங்களுக்கு? ஆமாம் என்றால் "same pinch...". ஏனென்றால், நானும் காசு திருடி மாட்டிகொண்டு பேந்த பேந்த முழித்து "shame shame" ஆகியிருக்கிறேன்.
அப்போது நான் ஏழாவது படிச்சிட்டிருந்தேன். எங்க பள்ளிகூடத்தில அந்த வருசம் தான் புதிதாக ஒரு தீனிக் கடை ஆரம்பித்தார்கள். மதியம் "lunch-break" ல் மட்டும் அந்த சிறியக் கடை திறந்திருக்கும். கடலை மிட்டாய், சோன் பப்டி, முறுக்கு, மாவுரண்டை போன்றத் தின்பண்டங்கள் வைத்திருப்பார்கள். ஒரு பீஸ் நாலணா.
எனக்கும் தீனி வாங்கி சாப்பிடணும்னு ரொம்ப ஆசை... வீட்டில் காசு கேட்டு அடம் பிடிச்சேன். அடிதான் கொடுத்தாங்க. பள்ளிக்கூடத்தில் அவ்வபோது கூட இருக்கிற பிள்ளைகள் வாங்கினா "share" பண்ணுவாங்க. ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அவ்வளோதான்..., அதுக்கப்புறம் தினமும் எங்க சித்தி (சித்திக் கூடத்தான் தினமும் ஸ்கூல் போவேன்) purse-ல இருந்து ஒரு ருபாய் இரண்டு ருபாய்னு காசு காணமல் போச்சு  ( ;-) ).
இப்படியே ஒரு பத்து நாள், நல்லா திருட்டு தீனி வாங்கி சாப்பிட்டு (இதுல எல்லாருக்கும் sharing வேற!!! ) ஹாப்பியா போச்சு. அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை... எங்க சித்தி, ஆயா, நான் எல்லோரும் வீட்டுல இருந்தோம். சித்தி ஏதோ ஆயாகிட்ட பேசிகிட்டே அலமாரிய சுத்தம் பண்ணிடிருந்தாங்க. பேச்சுவாக்கல (அல்லது வேண்டும் என்றேவா?), ஆயாகிட்ட "இப்போல்லாம் தினமும் என் purse-ல இருந்து காசு குறையுது, யாரோ எனக்குத் தெரியாம காசு எடுக்கறாங்கம்மா"ன்னு சொல்லிட்டிருந்தாங்க. இதுக்கு நான் என்ன reaction கொடுத்திருக்கணுங்க? வாய மூடிகிட்டு என் வேலைத்தான பார்க்கணும்.., ரொம்ப அறிவுக்கொழுந்துங்க நான்... அவங்க சொல்லி முடிக்கறதுக்குள்ளயே "சத்தியமா உங்க purse-ல இருந்து காசு நான் எடுக்கவே இல்ல சித்தி"னு சொல்லிட்டு பேந்த பேந்த முழிச்சேன். அவங்க ரெண்டுபேருக்கும் shock. கொஞ்ச நேரம் எதுமே பேசாம ரெண்டு பேரும் என்னையே பார்த்துட்டிருந்தாங்க. என் தலை தானாகவே தொங்கிப் போச்சு.
அதன் பிறகு அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கல ரெண்டுபேரும். அதுதான் அவர்கள் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய தண்டனை. "ஏன் புள்ள திருடின"ன்னு கேட்டு நாலு சாத்து சாத்தியிருந்தா கூட எனக்கு அவ்வளோ கஷ்டமா இருந்திருக்காது. அன்னைக்கோட அந்த திருட்டு எண்ணம் போயே போச்சுங்க.
அதுக்கப்புறம் இந்த மாதிரி அடுத்தவங்களோட காசு திருடுற எண்ணம் வரவே இல்லை. கொஞ்ச நாள்ல பள்ளிக்கூடத்துலேயே அந்தக் கடையை எடுத்துட்டாங்க. எனக்கு இப்போ தோணுது, என்னை மாதிரியே நிறைய பேரு திருட்டுத் தனமா தீனி வாங்க, அது அவங்க வீட்டுக்கு தெரிந்து, பள்ளிக்கூடத்துக்கு புகார் வந்து, அதனால கடையை எடுத்திருப்பார்களோ என்று.
எப்படியோ (என் மானம் போனாலும் பரவால்லைன்னு ) உங்க பிள்ளைங்க இப்படி ஏதாவது பண்ணினா எப்படி அவர்கள் தவறை அவர்களாகவே உணர வைப்பதுன்னு டெமோ பார்த்திங்களா? நல்லா இருந்துச்சா? ஓகே இதெல்லாம் ஒரு சமூக சேவை தான் பாஸ், இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கனும்! ( ;-) ).
சரி இப்போ நாட்டுக்கு சொல்ல வேண்டிய கருத்து என்னன்னா: பிள்ளைகள் எதாவது தவறு செய்தால், அவர்களைத் திட்டாமல், அடிக்காமல், அவர்களின் தவறை அவர்களாகவே உணர வைப்பதுதான் புத்திசாலித்தனம்.
Related Posts Plugin for WordPress, Blogger...