ஒவ்வொருத்தர் வீட்ல இருக்கற மரத்துக்கும் ஒரு கதை இருக்கும். எங்க வீட்ல இருக்கற மாமரத்துக்கும் ஒரு குட்டி கதை இருக்குது. அப்படி என்ன ஸ்பெஷல், தங்கத்துலயா மாங்கா காய்க்குதுன்னு நீங்க கேக்கலாம். சத்தியமா அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க, பழம் கூட கொஞ்சம் சுமாராத்தான் ருசிக்கும். இருந்தாலும் என் மரம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் தான்...
முன்னல்லாம் எங்க வீட்ல எந்த ஒரு மரமும் இருக்காது, கொட்டாய (வீடு) சுத்தி வயக்காடு (வயல்) தான், குச்சி (மரவள்ளிக் கிழங்கு), மஞ்சள், சோளம், இல்லன்னா கடலை (நிலக்கடலை) தான் நாங்க எப்போவுமே பண்ற வெள்ளாம (விவசாயம்).
எங்களுக்கு மாம்பழம் வேணும்னா, எங்கம்மா சந்தையில தான் வாங்கிட்டு வரும்.சாப்டுட்டு கொட்டைய தூக்கி வயல்ல எரிஞ்சிடுவோம் (எவ்ளோ தூரமா எறியறோம்ன்னு போட்டி வேற). அப்படி தூக்கி போட்டதுல ஒன்னு குச்சிக்காட்டுக்குள்ள (அந்த வருஷம் குச்சி தான் வெள்ளாமை) முளைச்சி, எங்க யாருக்குமே தெரியாம நல்லா ஆளுயரத்துக்கு (சும்மா build-up பண்ணேன் :-)) வளர்ந்து இருந்துச்சி. குச்சிச் செடிங்க பொதுவா ஆறேழு அடி வளரும். எட்டு மாசத்துல இருந்து ஒரு வருஷத்துக்குள்ள கிழங்கை அறுவடை செய்வாங்க.
கிழங்கை பிடுங்கினதுக்கு அப்புறம் தான், வயலுக்குள்ள மாஞ்செடி வளர்ந்திருக்கறதயே பார்த்தோம். மாஞ்செடியப் பாத்ததும் என்னை கையில புடிக்க முடியல, ஒரே குஷி தான். எத்தன நாளா கேட்டிருப்பேன், ஒரு செடி வாங்கி தந்தாங்களா, இப்போ பாரு சூப்பரா ஒரு செடி தானவே வந்துடுச்சின்னு ஒரே சந்தோசம். என்னோட reaction மட்டுந்தாங்க இப்படி (கொஞ்சம் ஓவரா இருக்கோ?! ), மத்த யாரும் அந்த செடிய ஒரு பொருட்டா நெனைக்கவே இல்ல (பின்ன, வாங்கிட்டு வர்ற எல்லா பழத்தையும் நம்ம மட்டும்தான யாருக்கும் பங்கு தராம விழுங்கினோம், அப்புறம் அவங்களுக்கு எப்படி தெரியும் பழத்தோட அருமை, அந்தச் செடியோட அருமை...). எங்கப்பா வேற, இந்த செடி இங்க நடுகாட்டுக்குள்ள (நடு வயலுக்குள்) எதுக்கு, நாளைக்கு உழவு ஓட்டும்போது தொந்தரவா இருக்கும், அது வளர்ந்தா காட்டையே அடைச்சுக்கும் ,வெள்ளாம பண்ண முடியாது, பிடுங்கி போட்டுடலாம்னு சொன்னாங்க. அவ்ளோதான், எனக்கு வந்துடுச்சே கோபம்... அந்த செடிய பிடுங்கினுங்கின்னா அப்புறம் நான் உங்க யாருகிட்டயும் பேச மாட்டேன்னு அடம் பிடிச்சதுல, போய் தொலையுதுன்னு விட்டுடாங்க.
அப்புறம் ஒவ்வொரு வாட்டி எங்க வீட்டுக்கு போகும்போதும் (தாத்தா வீட்ல இருந்து) செடி வளர்ந்திருக்கான்னு ஆராய்ச்சி பண்ணி பார்ப்பேன் (அட நிஜமாதாங்க, செடி பக்கத்துல நின்னு என் ஒசரத்துக்கு (?!) அளந்து பார்ப்பேன், கிளைய கூட எண்ணி பார்ப்பேன்...) கொஞ்சமாவது வளர்ந்திருந்தா சந்தோஷம், இல்லைனா அவ்ளோதான், ரொம்ப பாவம் எங்க வீட்டு ஆளுங்க...
இப்படியே ஒரு மூணு நாலு வருஷத்துல பெரிய மரமாகிடுச்சி. ஆனா ஒரு பூ, பிஞ்சி வெக்கல. ஒருநாளு எங்கப்பா, இது வெத்து மரம், ஒன்னும் காய்க்கற மாதிரி தெரியல, பேசாம வெட்டிபுடலாம்னாங்க. எனக்கு அழுகையே வந்துடுச்சி. ஓடி போய் மரத்த கட்டி புடிச்சிட்டு அண்ணாந்து பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டிங்க, உள்ள, தளவுள, நாலஞ்சி பூங்கொலுந்துங்க... பாத்ததும் ஒரே கொண்டாட்டம் தான், அதும் நான் தாங்க மொதல்ல பார்த்தேன் (நான் சொன்ன ஸ்பெஷல் இதுதாங்க, சூப்பருல்ல...) :-).
அப்புறம், இப்போ வரைக்கும் வருஷா வருஷம் நல்லா காய்ச்சிட்டிருக்கு. என் பையன் வயத்துக்குள்ள இருக்கப்போ தினமும் ரெண்டு மாங்காவாவது பறிச்சி சாப்பிட்டுடுவேன். எங்களோட மாம்பழ ஏக்கத்த தீர்த்து வெச்ச என் செல்ல மாமரம் இந்த வருஷமும் நல்லா காய்ச்சிருக்காம். எப்போ ஊருக்கு போன் பண்ணாலும் மாமரம் நல்லா இருக்கா, பூ விட்ருச்சா, பிஞ்சி கொட்டிடுச்சான்னு கேட்டு கேட்டே எல்லாரையும் torture பண்ணிடுவேன். சலிப்பே இல்லாம என் மாமரம், ரோஜா செடி, கருவேப்பில, எழுமிச்ச மரம், நாய் குட்டி, ஆட்டுக்குட்டிங்க, மாடு, கன்னுக்குட்டின்னு என் விசாரிப்பு பட்டியல் போய்ட்டே இருக்கும். எங்க வீட்ல இருக்கவங்கதான் தான் கடுப்பாகிடுவாங்க. ம்ம்... மறந்தே போய்டேங்க, எங்க வாசல்ல ஒரு வெலா மரம் ஒன்னு வளந்துட்டு இருந்துச்சி, அது எப்படி இருக்குன்னு இன்னைக்கு போன் பண்றப்போ கேக்கணும் (அது எப்போ தின்னுட்டு போட்ட கொட்டையோ...?!). அச்சோ நீங்க ஒன்னும் பயப்படாதிங்க, இந்த வெலாங்கன்னுக்கு கதையெல்லாம் ஒன்னும் கெடையாது. ;-)
நான்தான் இப்படி மரத்துக்கு ஒரு கதை சொல்லிட்டு இருக்கேன்னா, எங்க அப்பா எனக்கும் மேல. வீட்டுக்கு யாரு வந்தாலும் உடனே, "எம்புள்ள வெச்ச மரம்"ன்னு (தானா வளந்ததுதான், இது எங்க அப்பாவோட பில்டப்பு!!!) கதைய ஆரம்பிச்சுடுவாங்க. "அப்பா ப்ளீஸ்"னு நான் தான் கண்ட்ரோல் பண்ண வேண்டிருக்கும் (எல்லாம் ஒரு அடக்கந்தான்....). அப்புறம் எங்க மாமா (மாமனார்)..., என் வீட்டுகாரர் சின்னப் புள்ளையா இருந்தப்போ எங்கயோ இருந்து கொண்டு வந்து வாசல்ல நட்டு வெச்ச வேப்ப மரத்த சாமியாவே நெனச்சி கும்பிட்டுட்டிருகாங்க (அந்த மரத்துக்கும் ஒரு பிளாஷ்பேக் கதை சொல்வாங்க).
இப்டி நம்ம வீட்டு மரம் ஒவ்வொன்னும் நம்ம வீட்டுல ஒரு ஆளாவே மாறிப் போய்டுதுள்ள... அந்த மரத்தடி நிழல்ல கட்டில் போட்டு இல்லன்னா அது மேலேயே சாய்ந்து உட்கார்ந்து எவ்ளோ கதை பேசி இருப்போம், எத்தனை நாள், நம்ம களைப்பையும், அலுப்பையும் மறந்து தூங்கி இருப்போம், எவ்ளோ சந்தோசங்களை பகிர்ந்துட்டிருப்போம், எத்தன எத்தன துக்கங்களையும், கண்ணீரையும் அந்த மரத்தடியில அழுது கரைச்சிருப்போம்...
காலாகாலத்துக்கும் நின்று, என் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும், நான் வாழ்ந்த கதையை (போனா போகுது, எங்க அண்ணன் கதையையும் கூட சேர்த்துக்கோ) சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டே இருப்பாய் என் இனிய மாமரத் தோழியே, உன்னோடு சேர்ந்து செழிப்பாக வளரட்டும் என் சந்ததிகளும்...!!!
இது எல்லா மரங்களுக்காகவும்:
மனித சந்ததிகளை சலனமே இல்லாமல் சந்தித்துக் கொண்டே இருக்கும் மரங்களே, உங்களை அழித்தால், அழிந்து போவது இந்த மானுடமும், அது சொல்லும் வரலாற்றுக் கதைகளும் தான்...!!!
** என்னங்க பண்றீங்க...? என்னாது...!?, நீங்களும் உங்க மரத்து கதைய எழுத ஆரம்பிச்சிடிங்களா..? ம்ம்... சூப்பர் கலக்குங்க பாஸ்..!!! :-) **
No comments:
Post a Comment