அப்போது நான் ஏழாவது படிச்சிட்டிருந்தேன். எங்க பள்ளிகூடத்தில அந்த வருசம் தான் புதிதாக ஒரு தீனிக் கடை ஆரம்பித்தார்கள். மதியம் "lunch-break" ல் மட்டும் அந்த சிறியக் கடை திறந்திருக்கும். கடலை மிட்டாய், சோன் பப்டி, முறுக்கு, மாவுரண்டை போன்றத் தின்பண்டங்கள் வைத்திருப்பார்கள். ஒரு பீஸ் நாலணா.
எனக்கும் தீனி வாங்கி சாப்பிடணும்னு ரொம்ப ஆசை... வீட்டில் காசு கேட்டு அடம் பிடிச்சேன். அடிதான் கொடுத்தாங்க. பள்ளிக்கூடத்தில் அவ்வபோது கூட இருக்கிற பிள்ளைகள் வாங்கினா "share" பண்ணுவாங்க. ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அவ்வளோதான்..., அதுக்கப்புறம் தினமும் எங்க சித்தி (சித்திக் கூடத்தான் தினமும் ஸ்கூல் போவேன்) purse-ல இருந்து ஒரு ருபாய் இரண்டு ருபாய்னு காசு காணமல் போச்சு ( ;-) ).
இப்படியே ஒரு பத்து நாள், நல்லா திருட்டு தீனி வாங்கி சாப்பிட்டு (இதுல எல்லாருக்கும் sharing வேற!!! ) ஹாப்பியா போச்சு. அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை... எங்க சித்தி, ஆயா, நான் எல்லோரும் வீட்டுல இருந்தோம். சித்தி ஏதோ ஆயாகிட்ட பேசிகிட்டே அலமாரிய சுத்தம் பண்ணிடிருந்தாங்க. பேச்சுவாக்கல (அல்லது வேண்டும் என்றேவா?), ஆயாகிட்ட "இப்போல்லாம் தினமும் என் purse-ல இருந்து காசு குறையுது, யாரோ எனக்குத் தெரியாம காசு எடுக்கறாங்கம்மா"ன்னு சொல்லிட்டிருந்தாங்க. இதுக்கு நான் என்ன reaction கொடுத்திருக்கணுங்க? வாய மூடிகிட்டு என் வேலைத்தான பார்க்கணும்.., ரொம்ப அறிவுக்கொழுந்துங்க நான்... அவங்க சொல்லி முடிக்கறதுக்குள்ளயே "சத்தியமா உங்க purse-ல இருந்து காசு நான் எடுக்கவே இல்ல சித்தி"னு சொல்லிட்டு பேந்த பேந்த முழிச்சேன். அவங்க ரெண்டுபேருக்கும் shock. கொஞ்ச நேரம் எதுமே பேசாம ரெண்டு பேரும் என்னையே பார்த்துட்டிருந்தாங்க. என் தலை தானாகவே தொங்கிப் போச்சு.
அதன் பிறகு அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கல ரெண்டுபேரும். அதுதான் அவர்கள் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய தண்டனை. "ஏன் புள்ள திருடின"ன்னு கேட்டு நாலு சாத்து சாத்தியிருந்தா கூட எனக்கு அவ்வளோ கஷ்டமா இருந்திருக்காது. அன்னைக்கோட அந்த திருட்டு எண்ணம் போயே போச்சுங்க.
அதுக்கப்புறம் இந்த மாதிரி அடுத்தவங்களோட காசு திருடுற எண்ணம் வரவே இல்லை. கொஞ்ச நாள்ல பள்ளிக்கூடத்துலேயே அந்தக் கடையை எடுத்துட்டாங்க. எனக்கு இப்போ தோணுது, என்னை மாதிரியே நிறைய பேரு திருட்டுத் தனமா தீனி வாங்க, அது அவங்க வீட்டுக்கு தெரிந்து, பள்ளிக்கூடத்துக்கு புகார் வந்து, அதனால கடையை எடுத்திருப்பார்களோ என்று.
எப்படியோ (என் மானம் போனாலும் பரவால்லைன்னு ) உங்க பிள்ளைங்க இப்படி ஏதாவது பண்ணினா எப்படி அவர்கள் தவறை அவர்களாகவே உணர வைப்பதுன்னு டெமோ பார்த்திங்களா? நல்லா இருந்துச்சா? ஓகே இதெல்லாம் ஒரு சமூக சேவை தான் பாஸ், இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கனும்! ( ;-) ).
சரி இப்போ நாட்டுக்கு சொல்ல வேண்டிய கருத்து என்னன்னா: பிள்ளைகள் எதாவது தவறு செய்தால், அவர்களைத் திட்டாமல், அடிக்காமல், அவர்களின் தவறை அவர்களாகவே உணர வைப்பதுதான் புத்திசாலித்தனம்.
No comments:
Post a Comment