Thursday, July 31, 2014

என் செல்ல மாஞ்செடியே...

ஒவ்வொருத்தர் வீட்ல இருக்கற மரத்துக்கும் ஒரு கதை இருக்கும். எங்க வீட்ல இருக்கற மாமரத்துக்கும் ஒரு குட்டி கதை இருக்குது. அப்படி என்ன ஸ்பெஷல், தங்கத்துலயா மாங்கா காய்க்குதுன்னு நீங்க கேக்கலாம். சத்தியமா அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க, பழம் கூட கொஞ்சம் சுமாராத்தான் ருசிக்கும். இருந்தாலும் என் மரம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் தான்...
முன்னல்லாம் எங்க வீட்ல எந்த ஒரு மரமும் இருக்காது, கொட்டாய (வீடு) சுத்தி வயக்காடு (வயல்) தான்,  குச்சி (மரவள்ளிக் கிழங்கு), மஞ்சள், சோளம்,  இல்லன்னா கடலை (நிலக்கடலை) தான் நாங்க எப்போவுமே பண்ற வெள்ளாம (விவசாயம்).
எங்களுக்கு மாம்பழம் வேணும்னா, எங்கம்மா சந்தையில தான் வாங்கிட்டு வரும்.சாப்டுட்டு கொட்டைய தூக்கி வயல்ல எரிஞ்சிடுவோம் (எவ்ளோ தூரமா எறியறோம்ன்னு போட்டி வேற). அப்படி தூக்கி போட்டதுல ஒன்னு குச்சிக்காட்டுக்குள்ள (அந்த வருஷம் குச்சி தான் வெள்ளாமை) முளைச்சி, எங்க யாருக்குமே தெரியாம நல்லா ஆளுயரத்துக்கு (சும்மா build-up பண்ணேன் :-)) வளர்ந்து இருந்துச்சி. குச்சிச் செடிங்க பொதுவா ஆறேழு அடி வளரும். எட்டு மாசத்துல இருந்து ஒரு வருஷத்துக்குள்ள கிழங்கை அறுவடை செய்வாங்க. 
கிழங்கை பிடுங்கினதுக்கு அப்புறம் தான், வயலுக்குள்ள மாஞ்செடி வளர்ந்திருக்கறதயே பார்த்தோம். மாஞ்செடியப் பாத்ததும் என்னை கையில புடிக்க முடியல, ஒரே குஷி தான். எத்தன நாளா கேட்டிருப்பேன், ஒரு செடி வாங்கி தந்தாங்களா, இப்போ பாரு சூப்பரா ஒரு செடி தானவே வந்துடுச்சின்னு ஒரே சந்தோசம். என்னோட reaction மட்டுந்தாங்க இப்படி (கொஞ்சம் ஓவரா இருக்கோ?! ), மத்த யாரும் அந்த செடிய ஒரு பொருட்டா நெனைக்கவே இல்ல (பின்ன, வாங்கிட்டு வர்ற எல்லா பழத்தையும் நம்ம மட்டும்தான யாருக்கும் பங்கு தராம விழுங்கினோம், அப்புறம் அவங்களுக்கு எப்படி தெரியும் பழத்தோட அருமை, அந்தச் செடியோட அருமை...). எங்கப்பா வேற, இந்த செடி இங்க நடுகாட்டுக்குள்ள (நடு வயலுக்குள்) எதுக்கு, நாளைக்கு உழவு ஓட்டும்போது தொந்தரவா இருக்கும், அது வளர்ந்தா காட்டையே அடைச்சுக்கும் ,வெள்ளாம பண்ண முடியாது, பிடுங்கி போட்டுடலாம்னு சொன்னாங்க. அவ்ளோதான், எனக்கு வந்துடுச்சே கோபம்... அந்த செடிய பிடுங்கினுங்கின்னா அப்புறம் நான் உங்க யாருகிட்டயும் பேச மாட்டேன்னு அடம் பிடிச்சதுல, போய் தொலையுதுன்னு விட்டுடாங்க.
அப்புறம் ஒவ்வொரு வாட்டி எங்க வீட்டுக்கு போகும்போதும் (தாத்தா வீட்ல இருந்து) செடி வளர்ந்திருக்கான்னு ஆராய்ச்சி பண்ணி பார்ப்பேன் (அட நிஜமாதாங்க, செடி பக்கத்துல நின்னு என் ஒசரத்துக்கு (?!) அளந்து பார்ப்பேன், கிளைய கூட எண்ணி பார்ப்பேன்...) கொஞ்சமாவது வளர்ந்திருந்தா சந்தோஷம், இல்லைனா அவ்ளோதான், ரொம்ப பாவம் எங்க வீட்டு ஆளுங்க...
இப்படியே ஒரு மூணு நாலு வருஷத்துல பெரிய மரமாகிடுச்சி. ஆனா ஒரு பூ, பிஞ்சி வெக்கல. ஒருநாளு எங்கப்பா, இது வெத்து மரம், ஒன்னும் காய்க்கற மாதிரி தெரியல, பேசாம வெட்டிபுடலாம்னாங்க. எனக்கு அழுகையே வந்துடுச்சி.  ஓடி போய் மரத்த கட்டி புடிச்சிட்டு அண்ணாந்து பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டிங்க, உள்ள, தளவுள, நாலஞ்சி பூங்கொலுந்துங்க... பாத்ததும் ஒரே கொண்டாட்டம் தான், அதும் நான் தாங்க மொதல்ல பார்த்தேன் (நான் சொன்ன ஸ்பெஷல் இதுதாங்க, சூப்பருல்ல...) :-).
அப்புறம், இப்போ வரைக்கும் வருஷா வருஷம் நல்லா காய்ச்சிட்டிருக்கு. என் பையன் வயத்துக்குள்ள இருக்கப்போ தினமும் ரெண்டு மாங்காவாவது பறிச்சி சாப்பிட்டுடுவேன். எங்களோட மாம்பழ ஏக்கத்த தீர்த்து வெச்ச என் செல்ல மாமரம் இந்த வருஷமும் நல்லா காய்ச்சிருக்காம். எப்போ ஊருக்கு போன் பண்ணாலும் மாமரம் நல்லா இருக்கா, பூ விட்ருச்சா, பிஞ்சி கொட்டிடுச்சான்னு கேட்டு கேட்டே எல்லாரையும் torture பண்ணிடுவேன். சலிப்பே இல்லாம என் மாமரம், ரோஜா செடி, கருவேப்பில, எழுமிச்ச மரம், நாய் குட்டி, ஆட்டுக்குட்டிங்க, மாடு, கன்னுக்குட்டின்னு என் விசாரிப்பு பட்டியல் போய்ட்டே இருக்கும். எங்க வீட்ல இருக்கவங்கதான் தான் கடுப்பாகிடுவாங்க. ம்ம்... மறந்தே போய்டேங்க, எங்க வாசல்ல ஒரு வெலா மரம் ஒன்னு வளந்துட்டு இருந்துச்சி, அது எப்படி இருக்குன்னு இன்னைக்கு போன் பண்றப்போ கேக்கணும் (அது எப்போ தின்னுட்டு போட்ட கொட்டையோ...?!). அச்சோ நீங்க ஒன்னும் பயப்படாதிங்க, இந்த வெலாங்கன்னுக்கு கதையெல்லாம் ஒன்னும் கெடையாது. ;-)
நான்தான் இப்படி மரத்துக்கு ஒரு கதை சொல்லிட்டு இருக்கேன்னா, எங்க அப்பா எனக்கும் மேல. வீட்டுக்கு யாரு வந்தாலும் உடனே, "எம்புள்ள வெச்ச மரம்"ன்னு (தானா வளந்ததுதான், இது எங்க அப்பாவோட பில்டப்பு!!!) கதைய ஆரம்பிச்சுடுவாங்க. "அப்பா ப்ளீஸ்"னு நான் தான் கண்ட்ரோல் பண்ண வேண்டிருக்கும் (எல்லாம் ஒரு அடக்கந்தான்....). அப்புறம் எங்க மாமா (மாமனார்)..., என் வீட்டுகாரர் சின்னப் புள்ளையா இருந்தப்போ எங்கயோ இருந்து கொண்டு வந்து வாசல்ல நட்டு வெச்ச வேப்ப மரத்த சாமியாவே நெனச்சி கும்பிட்டுட்டிருகாங்க (அந்த மரத்துக்கும் ஒரு பிளாஷ்பேக் கதை சொல்வாங்க). 
இப்டி நம்ம வீட்டு மரம் ஒவ்வொன்னும் நம்ம வீட்டுல ஒரு ஆளாவே மாறிப் போய்டுதுள்ள... அந்த மரத்தடி நிழல்ல கட்டில் போட்டு இல்லன்னா அது மேலேயே சாய்ந்து உட்கார்ந்து எவ்ளோ கதை பேசி இருப்போம், எத்தனை நாள், நம்ம களைப்பையும், அலுப்பையும் மறந்து தூங்கி இருப்போம், எவ்ளோ சந்தோசங்களை பகிர்ந்துட்டிருப்போம், எத்தன எத்தன துக்கங்களையும், கண்ணீரையும் அந்த மரத்தடியில அழுது கரைச்சிருப்போம்...
காலாகாலத்துக்கும் நின்று, என் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும், நான் வாழ்ந்த கதையை (போனா போகுது, எங்க அண்ணன் கதையையும் கூட சேர்த்துக்கோ)  சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டே இருப்பாய் என் இனிய மாமரத் தோழியே, உன்னோடு சேர்ந்து செழிப்பாக வளரட்டும் என் சந்ததிகளும்...!!!
இது எல்லா மரங்களுக்காகவும்: 
மனித சந்ததிகளை சலனமே இல்லாமல் சந்தித்துக் கொண்டே இருக்கும் மரங்களே, உங்களை அழித்தால், அழிந்து போவது இந்த மானுடமும், அது சொல்லும் வரலாற்றுக் கதைகளும் தான்...!!! 

** என்னங்க பண்றீங்க...? என்னாது...!?, நீங்களும் உங்க மரத்து கதைய எழுத ஆரம்பிச்சிடிங்களா..? ம்ம்... சூப்பர் கலக்குங்க  பாஸ்..!!! :-) **

Wednesday, July 30, 2014

பாம்பைப் பார்த்தா கூட பயம் இல்ல, இந்த அட்டையைப் பார்த்தா தான்.... :-(

சின்ன வயசுல இருந்தே இந்த அட்டைங்களக் (அட்டைப் பூச்சி) கண்டாலே எனக்கு செம பயம். என்ன பண்ணாலும் அந்த பயம் என்ன விட்டு போகமாட்டேன்குது... :-(
இப்போவும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு, எனக்கு ஒரு அஞ்சாறு வயசு இருக்கும், எங்க தாத்தா ஆடு மாடுங்களுக்கு தல (ஆடு மாடுகள் தீனியாக சாப்பிடும் இலை, செடி, கொடி, எல்லாம் சேர்த்த கட்டு) கொண்டு வர்றதுக்கு பனங்காடுக்கு (பனங்காடு என்பது பனைமரக் காடு, சும்மா கிடக்கும் விவசாயமற்ற பனைமரங்களும் புதர்களும் மண்டிக்கிடக்கும் காடு) போனப்போ நானும் அவங்க கூட ஓடி போயிட்டேன். ஆனா காட்டுக்குள்ள போக போகத்தான் உள்ள உதற ஆரம்பிச்சது.
திரும்பி வீட்டுக்கு போகலாம்னாளும் பயம், தாத்தா கூட போலாம்னாலும் பயம், ஏன்னு கேக்கறிங்களா, எல்லாம் இந்த ஊர்ற கருப்பு அட்டைங்க பிரச்சனை தாங்க, அப்டியே பெருசா நீளமா கரு கருன்னு கொச கொசன்னு மொய்க்கற கால்களோட, மழை பெய்ஞ்ச காலத்துல, புதரு மண்டிக் கடக்குற ஓட பக்கம் (சில சமயம் வீடு கட்டுதரையில), வேலி பக்கம்லாம் மெதுவா ஊறி ஊறி எங்கயாச்சும் போயிட்டிருக்கும். ஐயோ அத பாத்துட்டா அன்னைக்கு நாள் பூரா, கால கீழ வைக்கவே பயப்படுவேன். என் மேலேயே ஊர்ற மாதிரி ரொம்ப அருவருப்பா இருக்கும்.
தாத்தா வேலியில தல வெட்ட ஆரம்பிச்சிட்டாரு, எனக்குன்னா ஏதோ நெருப்பு மேல நிக்கற மாதிரி உயிர கையில புடிச்சிட்டு நின்னுட்டிருந்தேன். கொஞ்சம் கூட இறக்கம் இல்லாம அந்த இடத்துல எந்த பக்கம் இருந்தோ அந்த கரு கரு வில்லன் நெளிஞ்சி நெளிஞ்சி வந்தான் (பத்து அடி முன்னாலதாங்க...). அவ்ளோதான் அங்க எடுத்த ஓட்டம் தான், கால்ல செருப்பு கூட இல்லாம... கல்லு முள்ளு எதும் தெரியல (கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருக்கும்), அத்துவிட்ட மாடு மாதிரி (ஏதோ எல்லா அட்டைகளும் சேர்ந்து என்னத் தொரத்துற மாதிரி ஒரு கற்பனைல) ஓடியாந்து வீட்டு வாசப்படி ஏறித்தான் நின்னேன்.அப்புறம் தான் வலி தெரிஞ்சுது ரெண்டு கால்கள்ளையும்  பூரா முள்ளு குத்தி குத்தி ஒடிஞ்சு சிலாம்பா (ஒடிந்த முள் துணுக்கு) நின்னு போச்சு, பத்தாததுக்கு முழங்கால் வரைக்கும் கீறல்கள். அதுக்கு வேற முதுகுல நாலு வெச்சி, அன்னைக்கு பூரா முள்லெடுக்கி (முள் எடுக்க) வெச்சி குத்தி குத்தி எடுத்தாங்க. செம வலி... :-(
இன்னைக்கு அத நெனச்சா, அடச்சீ..., இதுக்கா இப்படி ஓடினோம்னு சிரிப்பு வருது, ஆனா அந்த வயசுல அது எனக்கு என்னமோ உயிர பறிக்கற விஷயமாத்தான் தோணுச்சி. யாராவது கேட்டா பாம்ப பாத்தாக் கூட பயப்படமாட்டேன் (?! :-) ), இந்த அட்டைய பாத்தாதான் உதறுதும்பேன்.
இதுல கஷ்டம் என்னன்னா நான் அட்டைக்கு பயபடுறேன்னு, ஒவ்வொரு வாட்டியும் நான் எதாவது குறும்பு பண்ணா, அடம் பண்ணா உடனே, அட்டைய புடிச்சி வந்து கட்டிடுவேன்னு பயமுறுத்துவாங்க எங்க அண்ணனுங்க.
நல்ல வெவரம் தெரிஞ்ச பெறகும் அந்த பயம் என்ன விட்டு போகல. ஊருல இருக்க வரைக்கும் மழை பேஞ்சா எங்க வயக்காட்டுப் பக்கம் கூட போகமாட்டேன், எங்கயாவது ஒன்னு ஊறிக்கிட்டு வந்து என் கண்ணுல பட்டுடுமோன்னு பயமா இருக்கும். இங்க அமெரிக்கா வந்த பிறகு கூட புல்வெளில நடக்குறப்போ என்ன அறியாம எங்கயாச்சும் அட்டை இருக்குமோனு பாத்துப்பேன்.
அந்த ஆழமான அட்டை பயம் (போபியா??? ) எப்படி வந்துச்சின்னு யோசிச்சுப்பாத்தா, அதுக்கான ஒரு சம்பவம் நியாபகத்துக்கு வந்துச்சு. ரொம்ப சின்ன புள்ளையா இருக்கப்போ ஒரு நாள் தாத்தா யாருகூடயோ (யாருன்னு சரியா இப்போ நியாபகம் வர மாட்டேன்றது, ஆனா அவங்க மட்டும் கையில கெடச்ச்ச்ச்ச்சா......... ;-( ) பெசிட்டிருந்தாங்க. தாத்தாகிட்ட அவங்களுக்கு ஏற்பட்ட, அட்டை ரத்தம் உறிஞ்சின experience பத்தி சொல்லிட்டிருந்தாங்க. அவங்க எங்கயோ போயிருந்தப்போ, மலை அட்டை ஒன்னு அவங்க கால்ல ஓட்டை போட்டு உள்ள போயிருச்சாம், அப்டியே கொடஞ்சிட்டே உள்ளே போக பயங்கரமா வலி எடுத்துடுச்சாம், அப்புறம் யாரோ சொன்னாங்கன்னு புகையிலை கசக்கி அந்த ஓட்டைக்குள்ள துணிக்க, அந்தக் காரத்துக்கு அட்டை வெளிய வந்துடுச்சாம். இத சொன்ன அவங்க கூட அப்போவே அத மறந்திருப்பாங்க,  ஆனா அங்க சும்மா கூட நின்னு கேட்டுக்கிட்டிருந்த எனக்கு அது அப்படியே மனசுக்குள்ள பதிஞ்சி போச்சு. இப்போ அத யோசிச்சா கூட அப்டியே "visual"-ஆ வந்து கண்ணுக்குள்ள நிக்குது, ஏதோ அட்டை என் கால்ல ஓட்டை போட்டு ரத்தம் உரியற மாதிரி...
இப்போ எனக்கு நல்லாவே தெரியும், அந்த மாதிரி இரத்த உறிஞ்சி அட்டையும் இருக்குன்னு, ஆனா நம்ம வாழற பகுதியில, மழை சமயத்துல தோன்றுகிற அட்டைகள் மிக சாதுக்கள் என்று. அது நம்மல ஒண்ணுமே பண்ணாதுன்னு (நம்ம அத எதும் பண்ணாம இருந்தா போதும்) நல்லாவே தெரியும், ஆனாலும் என்னால அந்த பயத்த overcome பண்ணி வர முடியல.
இந்த மாதிரி எல்லார்க்குள்ளும் ஏதாவது ஒரு பயம் சின்ன வயசுல உருவாகி இருக்கும் (கரப்பான் பூச்சிக்கு, பல்லிக்கு, பலூன்/பட்டாசு சத்தத்துக்கு, இருட்டுக்கு, சிலருக்கு தேங்கி இருக்கும் தண்ணிய பாத்தா கூட பயம் வரும்) , அதைய நம்ம வீட்ல இருக்கவங்க, திரும்ப திரும்ப (விளையாட்டுக்கு தான்) சொல்லி பயமுறுத்தி இருப்பாங்க. எவ்வளோ வயதானாலும் அந்த பயம் நம்மள விட்டுப் போகாது.

இத எதுக்கு இப்போ சொல்றேன்னா, நம்ம குழந்தைகள பக்கத்துல வெச்சுகிட்டு எப்பவும் எதுக்காகவும் எந்த ஒரு sensitive விஷயங்களையும் பேசவே கூடாது. நமக்கு ரொம்ப சாதரணமா தெரியற விஷயம் அவங்களுக்கு ரொம்ப பெரிய, பயமுறுத்துற விஷயமா தெரியலாம்.
குழந்தைங்க எதுக்கு பயப்படுறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு அந்த பயத்த போக்கறதுக்கு முயற்சி பண்ணணும். எக்காரணத்தை கொண்டும் அத சொல்லி குழந்தைகளை மிரட்டாதிங்க. ஏன்னா... சின்ன வயசுல ஏற்படுற இது போன்ற சில பயங்கள் நம்ம வாழ்க்கை முழுதுக்குமே நம்மல விட்டுப் போகாது. so... தெரியாம கூட அதை என்னைக்குமே நம்ம குழந்தைகள் மனசுல விதைச்சுட கூடாது... அப்படியே குழந்தைங்க எதுக்காவது ரொம்ப பயந்தாங்கன்னா, அந்த பயத்தை களைய வேண்டிய பொறுப்பும் நம்முடையதுதான்... இது அட்வைஸ் இல்லைங்க என்னோட kind request...!

Tuesday, July 29, 2014

மருமகள் அல்ல, அவள் இனி, இன்னொரு மகள்!

வேலைக்குச் செல்லும் திருமணமான புதுமணப் பெண்களே இது உங்களுக்கே உங்களுக்காக...
முன்பெல்லாம் பெண் குழந்தை பிறந்தால், நீ இதை கற்றுக் கொள், அதை தெரிந்து கொள், அப்போது தான் புகுந்த வீட்டில் நல்ல பேர் கிடைக்கும் என்று சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். இப்போது நிலைமை அப்படி இல்லை, பெண்ணாக இருந்தாலும் பையனாக இருந்தாலும் "நல்லா படித்து பெரிய வேலைக்கு போ" என்பது மட்டுமே பெற்றோர் ஓதும் மந்திரமாக மாறிவிட்டது.
வாழ்வதற்காக "படிப்பும் வேலையும்" இருந்த காலம் போய் இவ்விரண்டிற்காக மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதையே நம் பிள்ளைகள் வாழ்க்கைக்குள்ளும் திணிக்கிறோம்.
இவ்வாறே வளர்க்கப்படுகின்ற பெண் குழந்தைகள் (ஆண் பிள்ளைகளைப் பற்றி அடுத்த blog-ல்...) தங்கள் படிப்பிலும் வேலையிலும் மிக சிறப்பாக முன்னேறுகிறார்கள். இதனால் மற்ற விஷயங்களை கற்கும் ஆர்வம் குறைய, சமையலும், வீட்டில் நமக்கான வேலைகளும் என்ன என்றே தெரியாமல் போய்விடுகிறது.
இப்படி படிப்பும் நல்ல வேலையும் தவிர வேறு எதையும் கற்று வளராத பெண்களுக்கு, திருமணம் நடந்த பின்புதான் வாழ்கையின் தேவைகள் புரிய ஆரம்பிக்கின்றன.
திருமணம் முடிந்தவுடனேயே  மாபிள்ளையும் பெண்ணும் தாங்கள் வேலை பார்க்கும் ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். இதில் கஷ்டம் என்னவென்றால் நிறைய பெண்களுக்கு இன்னும் அவர்களை கட்டிக்கொடுத்த சொந்த ஊர், வீடு, எங்கிருக்கின்றது என்றே தெரிவதில்லை. அங்கே நமக்கான வேலைகள் நமக்கென்று காத்திருக்க, புதிய வேலைகளும் குடும்ப சூழலும் புரியாத பெண்கள் அதை சமாளிக்க ஒரு உத்தியை கையாள்கின்றனர். அதுதான் உதவிக்கென்று தங்கள் பெற்றோரை அல்லது அம்மாவை மட்டும் உடன் அழைத்துச் செல்வது.
மாமியாருக்கு ஒரு பெண் இருந்தால் அவர் தன் மகள் வீட்டில் உதவிக்கு இருப்பார், எந்த பிரச்னையும் இருக்காது. அனால் ஒரே மகனாகவோ, அல்லது மகன்களை மட்டுமே பெற்ற மாமியாருக்கு தான் கஷ்டம் வருகிறது (அல்லது மாமியாரால் கஷ்டம் வருகிறது). அப்போதும் விட்டுக் கொடுக்கும் (மிக) சில மாமியார்கள் பேரப் பிள்ளைகள் பிறந்தவுடன், உரிமை/பாசம் ஈர்த்திழுக்க ஓடி வருகிறார்கள். பிறகு அம்மா கொஞ்ச காலம் மாமியார் கொஞ்ச காலம் என ஷிப்ட போட்டுக்கொள்கிறார்கள்.
இப்போதுதான் மாமியாரோடு பழகி அறியாத மருமகளுக்கு பிரச்னை உருவாகிறது. சமையல் செய்யாத மருமகளை மாமியார் ஜாடை மாடையில் திட்ட, நல்ல வேலை, உயர்ந்த சம்பளம் வாங்கும் மருமகளுக்கு கோபம் வர பிரச்னை முற்றுகிறது.
இப்போதைய நிலைமாறும் நிகழ்காலத்தில் (transition period) இதுதான் பெரும்பாலான (புரிதலற்ற) குடும்பங்களின் நிலைமை. இன்னும் சில காலம் போனால் ஒரு வேலை, முழுமையாக எல்லா வேலைகளையும் (வீடு/ஆபீஸ்) கணவன்-மனைவி இருவருமே புரிந்துணர்வோடு பகிர்ந்து செய்து கொள்ளலாம். அப்போது மாமியார்-மருமகள் உறவில் தோழமையோடு கூடிய அந்யோன்யம் இருக்கும். இந்த மாதிரி சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் எல்லாம் காணாமல் போய்விடும். அல்லது பெண்னின் பெற்றோர் மகளோடும் மருமகனோடும் சேர்ந்து வாழக்கூடிய மாற்றங்கள் நிகழலாம்.
எது எப்படி இருந்தாலும் இப்போதைக்கு இந்த  போன்ற விஷயங்களை சமாளிக்க புதிய மாமியாரோடு நல்லுறவும் தோழமையும் ஏற்படுத்திக்கொள்ள புது மருமகள்களுக்கு இதோ சில யோசனைகள்...

  • மாமியார் கூட முதல்ல ஒரு ஜாலி பேச்சை ஆரம்பிக்க, உங்க கணவரோட நல்ல குணங்களை கண்டு கொள்ளுங்க. அவற்றை எல்லாம்  உங்கள் மாமியாரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இது நீங்கள் இருவரும் தடையற்று பேச உதவும் மிக நல்ல topic. அப்படியே கொஞ்சம் கூட மாட சமையலுக்கு உதவுனிங்கன்னா, அப்புறம் நீங்க தான் பெஸ்ட் மருமகள் ஆகிடுவிங்க.
  • மாமியாரிடம் கணவரின் சிறு வயதுக் குறும்புகளின் கதைகளைக் கேளுங்கள். சுவாரசியமாக அதே சமயம் உங்கள் கணவரைப் பற்றி அறிய இது நல்ல வாய்ப்பு. நல்ல விஷயங்கள் மாட்டினால் அதை வைத்து கணவரை ஓட ஓட ஓட்டலாம்... :-)
  • உங்கள் மாமியாரின் சமையல் சூப்பரோ சூப்பர் என்று சொல்லுங்கள். பொதுவாகவே அனுபவசாலிகளான அவர்களின் சமையல் சூப்பராகத்தான் இருக்கும், அதை வாய் விட்டு (வேண்டுமானால் கொஞ்சம் மிகைப்படுத்தி ) கூறுங்கள்.
  • வெளியில் சென்று வந்தால் பூ வாங்கி கொடுப்பது, சின்னைச்சின்ன பரிசுகள் (கணவனுக்கு கொடுக்கிறிர்களோ இல்லையோ மாமியாருக்கு கட்டாயமாக கொடுங்கள்) கொடுப்பது, மொட்டுப்பூ வாங்கி மாமியாரை தொடுத்து தர சொல்லி நீங்கள் சூடிக்கொள்வது, அத்தைக்கு பிடித்த கலர் அறிந்து, அந்த கலரில் surprise சாரி வாங்கிக் கொடுப்பது என அசத்துங்கள்.
  • உங்கள் மாமியார் கொஞ்சம் படித்தவர் என்றால் கம்ப்யூட்டர், கேம்ஸ் கற்று கொடுங்கள்.
  • மாமியாரை அசுத்துவதற்காகவே அப்பபோ (ஏன் என்றால் வேலைக்கு போகும் பெண்களுக்கு எல்லா நாளும் வீட்டு வேலைகள் செய்வது கொஞ்சம் கடினம் தான்) புதிதாக சமைத்துக் கொடுங்கள். உங்களுக்கும் ஜாலியா இருக்கும், அவங்களுக்கும் உங்கள் மீது பாசம் அதிகரிக்கும்.

இது எல்லாமே உரிமை கலந்த அன்புப் பரிமாற்றங்கள். இப்படி இருந்தால் முதலில் பயத்தோடு ஆரம்பித்தாலும் போகப்போக உண்மையான தாய்-சேய் அன்பு இருவருக்குள்ளும் ஏற்பட்டு, மிக அற்புதமான தோழிகள் ஆகிவிடுவீர்கள் இருவரும்.
அம்மா மகள் உறவைக் காட்டிலும் தித்திப்பானது மாமியார் மருமகள் உறவு, அது சரியாக அமைந்தால்...
மாமியார்களுக்கும் சில டிப்ஸ் இங்கே...!!!

Monday, July 28, 2014

ஆட்டுக்குட்டி

எங்கள் கிராமம் குக்கிராமம் என்று சொல்வோமே, அது போலத்தான் இருக்கும். சினிமாவில் காட்டுவது போல அப்டியே பச்சை பசேல்னு எல்லாம் இருக்காது. சில சமயம் மழை பெய்யும், கிணற்றில் தண்ணி இருக்கும், நிலத்துல வெள்ளாமையும் இருக்கும். 
நான் சின்னதுல இருந்தே எங்க (அம்மாவை பெத்த) தாத்தா வீட்ல தான் வளந்தேன். எங்க வீட்ல ஆடு, எருமை, மாடு, கோழி, நாய்னு வீட்ல வளர்த்துகிற எல்லாமே இருக்கும். அப்போலாம் என் நண்பர்கள்னா அது என் பாப்பு, நிம்மி, மண்டையன் (இதெல்லாம் என்னோட அட்டுகுட்டிகளின் பேரு :-) ) அப்புறம் என் நாய் குட்டி ஜூலி (ஜூலியோட கதை அடுத்த ப்ளாக் ல சொல்றேன்) . தினமும் என் பாப்பு என் கூடத்தான் கட்டிலில் படுத்திருக்கும் (காலையில் பார்த்தால் ஜமுக்காளத்தில் ஒரே ஆட்டாம்புளுக்கையாக இருக்கும். ஏம்புள்ள இப்டி பண்றன்னு எங்க ஆயாவும் திட்டி பார்த்து சலித்து போய் விட்டுடாங்க. அப்புறம் பார்த்தா எங்க ஆயாவும் நிம்மியும் அவ்ளோ friends ஆகிடாங்க. நிம்மி ஆட்டுக்குட்டி என்ன கண்டுக்காம எங்க ஆயா கட்டில்ல தான் படுத்திருக்கும். 
தினமும் சாயுங்காலம் ஸ்கூல் விட்டு வந்ததும் ஆடு மேய்க்க ஓடைக்கு ஓட்டிட்டு போய்டுவோம், செம ஜாலியா இருக்கும். ஓடைன்னா அதுல தண்ணி முன்னால எப்போவாச்சும் ஓடுச்சானு தெரியல, அதைத்தான் பொது தடமா ஒவ்வொருத்தர் காட்டுக்கும் (காடு என்பது ஒவ்வொருத்தர் வீடு+நிலம் மொத்தம் சேர்த்து அவங்க காடு இவங்க காடு என்று அவங்கவங்க பட்ட பேர் சேர்த்து சொல்வோம்) போற வழித்தடமா பயன்படுத்துவாங்க. எங்க ஆட்டுகுட்டிகல்லாம் "பாப்பு இங்க வான்னா" எல்லா என்கிட்டே ஓடி வரும். புதர்ல இருக்க கொடி, தலைலாம் பிச்சு போட்டா சூப்பரா சாப்ட்டுட்டு என் கூடயே சுத்திடிருக்கும். எனக்கு அப்போல்லாம் அதுல ஒரு பெருமை, சந்தோசம்... என்னமோ ஒரு நூறு பேரு என் பேச்சி கேட்டு என் பின்னால வர மாதிரி... ஸ்கூலுக்கு போனா இந்த ஆட்டுக்குட்டி கதைதான் ஓடும். 
ஆனா எது எப்படி இருந்தாலும் "ஆடு அறுக்கறவனதான் நம்பும்"னு சொல்ற மாதிரி, எதாவது நோம்பி நொடின்னு வந்தா உடனே இந்த ஆடுங்கள விலை பேசி வித்துருவாங்க. இப்போ புரியுது இதெலாம் நாம வளக்கறதே இப்டி விக்கறதுகாகதான்னு. அப்போ ஒவ்வொரு முறையும் அப்படி அழுது கத்துவேன், டிவிஎஸ் 50 இல்லனா சைக்கிள் லதான் கால கட்டி தொங்க போட்டு தூக்கிட்டு போவாங்க. வண்டி பின்னாடியே ஓடுவேன், நாலைந்து நாள் சாப்பிடாம பாப்பு பாப்புனு அழுதுட்டே கிடப்பேன். அப்புறம் மறுபடியும் இருக்குற குட்டிகளுக்கு பேரு வைப்பேன், ஒன்னாவே கூடவே கூட்டிட்டு சுத்திட்டிருப்பேன். 
இப்படி வளர்ந்த என்னால என் குழந்தைக்கு ஒரு ஆட்டுகுட்டியோ, நாய் குட்டியோ காட்ட முடியவில்லை (இப்போ இருப்பது அமெரிக்காவில்), அவனை பொறுத்த வரை ஆட்டுக்குட்டி என்பது carton rhymes-ல் வருவது தான் நிஜம். உண்மையான ஆட்டையோ மாட்டையோ காட்டினால் கூட அவனுக்கு தெரிவதில்லை.
இன்று என் இரண்டு வயது பையனுக்கு எல்லாமே தெரிகிறது "Tablet" தான் அவனுடைய ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, எல்லாமுமாகிவிட்டது ... அவனுடைய அப்பாவித்தனமான அந்த இரண்டு வயது குழந்தைத் தனம் மிஸ்ஸாகி ஏதோ ஸ்கூல் பையன் மேசுரிட்டி இப்போதே வந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு... 
சரி போகட்டும், ஒரு நாள் நிச்சயமா அவனும் ஆட்டுக்குட்டியும் கன்னுக்குட்டியும் தொரத்திகிட்டு பின்னால் சுற்றுவான், கோழிங்களோடு கொஞ்சி, நாய் குட்டியோடு புரண்டு, அரை டௌவ்சர் போட்டுக்கிட்டடு, பெரிய சைக்கிள் தள்ளி, மா மரக்கிளையில் கார் ஓட்டி, தென்னை மரம் வழுக்களோடு ஏறக்கற்று, புழுதியில விளையாடி (ஏன்னா இப்போல்லாம் தண்ணி பஞ்சத்துல நிறைய வயல் ஓட்டி போட்டு சும்மா புழுதியா தான் கிடக்குது) வயலும் வயல் சார்ந்த வாழ்கையுமாக வாழ்வதற்காகவே திரும்பவும் எங்கள் கிராமத்திற்கே சென்று சொந்தங்களோடும் பந்தங்கோளோடும் கூடிக்கொழவி வாழ வேண்டும் என்று திடமாக எழும் ஆவலோடு...  
Related Posts Plugin for WordPress, Blogger...