Tuesday, July 29, 2014

மருமகள் அல்ல, அவள் இனி, இன்னொரு மகள்!

வேலைக்குச் செல்லும் திருமணமான புதுமணப் பெண்களே இது உங்களுக்கே உங்களுக்காக...
முன்பெல்லாம் பெண் குழந்தை பிறந்தால், நீ இதை கற்றுக் கொள், அதை தெரிந்து கொள், அப்போது தான் புகுந்த வீட்டில் நல்ல பேர் கிடைக்கும் என்று சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். இப்போது நிலைமை அப்படி இல்லை, பெண்ணாக இருந்தாலும் பையனாக இருந்தாலும் "நல்லா படித்து பெரிய வேலைக்கு போ" என்பது மட்டுமே பெற்றோர் ஓதும் மந்திரமாக மாறிவிட்டது.
வாழ்வதற்காக "படிப்பும் வேலையும்" இருந்த காலம் போய் இவ்விரண்டிற்காக மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதையே நம் பிள்ளைகள் வாழ்க்கைக்குள்ளும் திணிக்கிறோம்.
இவ்வாறே வளர்க்கப்படுகின்ற பெண் குழந்தைகள் (ஆண் பிள்ளைகளைப் பற்றி அடுத்த blog-ல்...) தங்கள் படிப்பிலும் வேலையிலும் மிக சிறப்பாக முன்னேறுகிறார்கள். இதனால் மற்ற விஷயங்களை கற்கும் ஆர்வம் குறைய, சமையலும், வீட்டில் நமக்கான வேலைகளும் என்ன என்றே தெரியாமல் போய்விடுகிறது.
இப்படி படிப்பும் நல்ல வேலையும் தவிர வேறு எதையும் கற்று வளராத பெண்களுக்கு, திருமணம் நடந்த பின்புதான் வாழ்கையின் தேவைகள் புரிய ஆரம்பிக்கின்றன.
திருமணம் முடிந்தவுடனேயே  மாபிள்ளையும் பெண்ணும் தாங்கள் வேலை பார்க்கும் ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். இதில் கஷ்டம் என்னவென்றால் நிறைய பெண்களுக்கு இன்னும் அவர்களை கட்டிக்கொடுத்த சொந்த ஊர், வீடு, எங்கிருக்கின்றது என்றே தெரிவதில்லை. அங்கே நமக்கான வேலைகள் நமக்கென்று காத்திருக்க, புதிய வேலைகளும் குடும்ப சூழலும் புரியாத பெண்கள் அதை சமாளிக்க ஒரு உத்தியை கையாள்கின்றனர். அதுதான் உதவிக்கென்று தங்கள் பெற்றோரை அல்லது அம்மாவை மட்டும் உடன் அழைத்துச் செல்வது.
மாமியாருக்கு ஒரு பெண் இருந்தால் அவர் தன் மகள் வீட்டில் உதவிக்கு இருப்பார், எந்த பிரச்னையும் இருக்காது. அனால் ஒரே மகனாகவோ, அல்லது மகன்களை மட்டுமே பெற்ற மாமியாருக்கு தான் கஷ்டம் வருகிறது (அல்லது மாமியாரால் கஷ்டம் வருகிறது). அப்போதும் விட்டுக் கொடுக்கும் (மிக) சில மாமியார்கள் பேரப் பிள்ளைகள் பிறந்தவுடன், உரிமை/பாசம் ஈர்த்திழுக்க ஓடி வருகிறார்கள். பிறகு அம்மா கொஞ்ச காலம் மாமியார் கொஞ்ச காலம் என ஷிப்ட போட்டுக்கொள்கிறார்கள்.
இப்போதுதான் மாமியாரோடு பழகி அறியாத மருமகளுக்கு பிரச்னை உருவாகிறது. சமையல் செய்யாத மருமகளை மாமியார் ஜாடை மாடையில் திட்ட, நல்ல வேலை, உயர்ந்த சம்பளம் வாங்கும் மருமகளுக்கு கோபம் வர பிரச்னை முற்றுகிறது.
இப்போதைய நிலைமாறும் நிகழ்காலத்தில் (transition period) இதுதான் பெரும்பாலான (புரிதலற்ற) குடும்பங்களின் நிலைமை. இன்னும் சில காலம் போனால் ஒரு வேலை, முழுமையாக எல்லா வேலைகளையும் (வீடு/ஆபீஸ்) கணவன்-மனைவி இருவருமே புரிந்துணர்வோடு பகிர்ந்து செய்து கொள்ளலாம். அப்போது மாமியார்-மருமகள் உறவில் தோழமையோடு கூடிய அந்யோன்யம் இருக்கும். இந்த மாதிரி சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் எல்லாம் காணாமல் போய்விடும். அல்லது பெண்னின் பெற்றோர் மகளோடும் மருமகனோடும் சேர்ந்து வாழக்கூடிய மாற்றங்கள் நிகழலாம்.
எது எப்படி இருந்தாலும் இப்போதைக்கு இந்த  போன்ற விஷயங்களை சமாளிக்க புதிய மாமியாரோடு நல்லுறவும் தோழமையும் ஏற்படுத்திக்கொள்ள புது மருமகள்களுக்கு இதோ சில யோசனைகள்...

  • மாமியார் கூட முதல்ல ஒரு ஜாலி பேச்சை ஆரம்பிக்க, உங்க கணவரோட நல்ல குணங்களை கண்டு கொள்ளுங்க. அவற்றை எல்லாம்  உங்கள் மாமியாரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இது நீங்கள் இருவரும் தடையற்று பேச உதவும் மிக நல்ல topic. அப்படியே கொஞ்சம் கூட மாட சமையலுக்கு உதவுனிங்கன்னா, அப்புறம் நீங்க தான் பெஸ்ட் மருமகள் ஆகிடுவிங்க.
  • மாமியாரிடம் கணவரின் சிறு வயதுக் குறும்புகளின் கதைகளைக் கேளுங்கள். சுவாரசியமாக அதே சமயம் உங்கள் கணவரைப் பற்றி அறிய இது நல்ல வாய்ப்பு. நல்ல விஷயங்கள் மாட்டினால் அதை வைத்து கணவரை ஓட ஓட ஓட்டலாம்... :-)
  • உங்கள் மாமியாரின் சமையல் சூப்பரோ சூப்பர் என்று சொல்லுங்கள். பொதுவாகவே அனுபவசாலிகளான அவர்களின் சமையல் சூப்பராகத்தான் இருக்கும், அதை வாய் விட்டு (வேண்டுமானால் கொஞ்சம் மிகைப்படுத்தி ) கூறுங்கள்.
  • வெளியில் சென்று வந்தால் பூ வாங்கி கொடுப்பது, சின்னைச்சின்ன பரிசுகள் (கணவனுக்கு கொடுக்கிறிர்களோ இல்லையோ மாமியாருக்கு கட்டாயமாக கொடுங்கள்) கொடுப்பது, மொட்டுப்பூ வாங்கி மாமியாரை தொடுத்து தர சொல்லி நீங்கள் சூடிக்கொள்வது, அத்தைக்கு பிடித்த கலர் அறிந்து, அந்த கலரில் surprise சாரி வாங்கிக் கொடுப்பது என அசத்துங்கள்.
  • உங்கள் மாமியார் கொஞ்சம் படித்தவர் என்றால் கம்ப்யூட்டர், கேம்ஸ் கற்று கொடுங்கள்.
  • மாமியாரை அசுத்துவதற்காகவே அப்பபோ (ஏன் என்றால் வேலைக்கு போகும் பெண்களுக்கு எல்லா நாளும் வீட்டு வேலைகள் செய்வது கொஞ்சம் கடினம் தான்) புதிதாக சமைத்துக் கொடுங்கள். உங்களுக்கும் ஜாலியா இருக்கும், அவங்களுக்கும் உங்கள் மீது பாசம் அதிகரிக்கும்.

இது எல்லாமே உரிமை கலந்த அன்புப் பரிமாற்றங்கள். இப்படி இருந்தால் முதலில் பயத்தோடு ஆரம்பித்தாலும் போகப்போக உண்மையான தாய்-சேய் அன்பு இருவருக்குள்ளும் ஏற்பட்டு, மிக அற்புதமான தோழிகள் ஆகிவிடுவீர்கள் இருவரும்.
அம்மா மகள் உறவைக் காட்டிலும் தித்திப்பானது மாமியார் மருமகள் உறவு, அது சரியாக அமைந்தால்...
மாமியார்களுக்கும் சில டிப்ஸ் இங்கே...!!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...