Monday, November 10, 2014

ஞாயிற்று கிழமை வந்தாலே...

அப்போதெல்லாம் ஞாயிற்று கிழமை வந்தாலே செம குஷியா இருக்கும். பள்ளிக்கூடம் லீவுன்றது ஒரு பக்கம் இருந்தாலும் பொண்டு பொடுசுங்க எல்லாம் சேர்ந்து குதித்தாளம் போடலாமே, அதுதான் முக்கியமானது. ஒன்னு நாம பக்கத்து வீட்ல இருப்போம், அல்லது அவங்க நம்ம வீட்ல இருப்பாங்க. இல்லன்னா நானும் வேலை செய்யறேன்னு எதாவது எடுபுடி வேலை செஞ்சிட்டிருப்போம் (அது கூட ஒரு செம entertainment-தாங்க).
அப்போல்லாம் வாசல்ல மண் அடுப்பு கூட்டி தான் சோறு பொங்குவாங்க. பொதுவா நாங்க வளர்க்கற கோழிச் சேவலுங்கள்ள ஒன்ன புடிச்சி, அடிச்சி, தென்னஞ்சோவையை பற்ற வெச்சு, அடிச்ச சேவல வாட்டுவாங்க. சேவலோட பொங்கு முடி பொசுங்கும்போது வரும் கருகு வாடை காற்றோடு கலந்து மூக்கில் ஏறும். வாட்டின பொறவு மஞ்சத் தூள் போட்டு நல்லா கழுவி எடுப்பாங்க. அது வரைக்கும் எங்க தாத்தா பின்னாலேயே நின்னுகிட்டு, குளிருக்கு கைய கட்டியிருப்பாங்களே, அது மாதிரி குறுக்கால கட்டிக்கிட்டு, குறு குறுன்னு கோழியையே கண்ணெடுக்காம பார்த்துட்டிருப்பேன். "கண்ணு, போயி மஞ்சப்பொடி டப்பாவ எடுத்துக்கிட்டு வா"ன்னு சொன்னா போதும், குடு குடுன்னு ஓடி போய், கீழ பாதி மேல பாதின்னு கொட்டிகிட்டு கொண்டு வருவேன் (அதுக்கு ஒரு திட்டு விழுந்தாலும், அதையெல்லாம் யாரு காதுல வாங்குனது..!? :-)). அவ்வளவு அவசரம், நாம வர்றதுக்குள்ள எதாவது பண்ணிடுவாங்களோன்னு (class-அ மிஸ் பண்ணிட கூடாதுல்ல). அப்புறம் என்னை சேவலோட கழுத்த தூக்கி பிடிக்க சொல்லுவாங்க. பெருசு பெருசா ரெண்டு வாழை இலை அறுத்து வந்து, ஒன்னோடு ஒன்னு சேர்த்தது போல போட்டு, அது மேல கறி நறுக்குற கட்டைய வெச்சு, அந்த கட்ட மேல சேவல வெச்சு, அதுக்குன்னே இருக்கற பெரிய கொடுவாள்ல நறுக் நறுக்குன்னு வெட்டித் தனித் தனியா குவிச்சு வைப்பாங்க. 
இதோட நம்ம வேலை முடிஞ்சுது. அதுக்கப்புறம் இந்த சமையல் section பக்கமெல்லாம் நாம எட்டி கூட பார்க்கமாட்டோம் (அது வேற department ! ;-)). எங்க, அத எடுத்துட்டு வா, இத நுணுக்கிட்டு வான்னு, கூப்பிட்டுருவாங்கலோன்னு பம்பிகிட்டே நிப்பேன். அப்போன்னுதான், கரெக்டா எங்க அண்ணன கூப்பிட்டு, "டேய், போயி சின்னத் தென்ன மரத்துல ஒரு எளந்தேங்கா பறிச்சிட்டு வா"ன்னு சொல்வாங்க. இந்த சான்ஸ நாம விடுவமா, அவன் சரின்னு தலைய ஆட்டுறதுக்குள்ள  நான் கீழ் தென்ன மட்டைய பிடிச்சிட்டு தொங்கிட்டிருப்பேன், மரம் ஏர்றதுக்கு. 
எங்க அம்மா ஒரு காயின்னு சொன்னா, நான் எப்படியும் ரெண்டு மூணு காயாவது பிடுங்கி போட்டு, தூக்க முடியாம தூக்கிட்டு போவேன். "எதுக்கு புள்ள இத்தன தேங்கா"ன்னு ஷாக்-ல வாயடைச்சு நிப்பாங்க. அப்புறம் எப்படியும் ஒரு ரெண்டு காய உரிச்சு, ஒடச்சு, தண்ணிய புல்லா குடிச்சிட்டு, அம்மா இந்தா தேங்கான்னு கொடுப்பேன். அதுக்குள்ள, அங்க பெரிய குண்டாவுல குழம்பு ரெடியா கொதிச்சிட்டிருக்கும். குழம்பு குடிக்கறவங்க வாங்கன்னு எங்கம்மா கூப்பிடுறதுக்குள்ள, நாங்கல்லாம் பெர்பெக்டா, அடுப்ப சுத்தி ஆஜர் ஆகிடுவோம். 
உடைச்ச தேங்காவுல இருக்கற பருப்ப நோண்டி தனியா எடுத்துட்டு, ஆளுக்கொரு தொட்டிய (தேங்காய் ஓட்டினை தென்னந்தோட்டின்னு பேச்சுவழக்குல சொல்வோம்) கையில கொடுத்து, அதுல குழம்பு ஊற்றுவாங்க. (அது ரசத்தின் தடிப்பில் இருக்கும், குழம்பிற்கு தேங்காய் அரைத்து விடும் முன்பு, மசாலா பொருட்களில் வெந்த நீர், கொஞ்சம் காரமாக, சூப்பராக இருக்கும்). யாருக்கு அதிகமா இருக்குன்னு அதுக்கொரு சண்டை வரும் அப்போ. எப்படியும் எனக்கு தான் அதிகமா இருக்கும், இருந்தாலும், ஒவ்வொருத்தரோட தொட்டியையும் செக் பண்ணி பார்த்துட்டு தான், நாங்க குடிப்போமுல்ல!. எப்படியும் ஒரு ரெண்டு வாய் குடிச்சிட்டு, சுடுது, கார்க்குதுன்னு, எங்க அம்மகிட்டயோ, சித்திகிட்டயோ கொடுத்துட்டு ஓடிடுவேன். அதுக்கு இவ்வளவு பில்டப்பு...!!!
அதுக்கப்புறம் எப்படியும் சாப்பாடு ரெடி ஆக மதியான நேரம் ஆகிடும்.
நல்லா சாப்பிட்டுட்டு, எல்லாரும் வெப்ப மரத்தடியில் கயித்துக் கட்டில போட்டு, உட்கார்ந்து கதை பேசிட்டிருப்பாங்க. நான் நல்ல கதை கேட்டுகிட்டே என்னோட ஆட்டுக்குட்டிக்கு பேன் பார்த்துட்டிருப்பேன் (!! :-) ). அப்புறம் சாயங்காலம் இருட்டுற வரைக்கும் பிஸியா "வேலை?" பார்த்துட்டு, அடுத்த நாள் பள்ளிகூடம் போகணும்கிற நெனப்புல, எப்போடா அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரும்ன்னு நினைச்சிட்டே homework பண்ணிட்டு படிக்க ஆரம்பிச்சிடுவேன் (நம்புங்க மக்களா, நாங்களும் படிச்சோமுள்ள !!! ).

Related Posts Plugin for WordPress, Blogger...