Thursday, August 14, 2014

கொஞ்ச நேரம் கதை பேசலாம்...

திண்ணைப் பேச்சு 

எங்கள் தாத்தா வீடு அந்த காலத்தில் கட்டிய பழைய ஓட்டு வீடு. நெட்டாக நான்கு அறைகள் இருக்கும். நடுவிலிருக்கும் ஹாலை "பட்டா சாலை" என்று அழைப்போம். பட்டாசாலைக்குள் நுழைய இரண்டு வாசற்படி வைத்து, அடுத்தார் போல கதவோடு கூடிய மர  நிலவுக்கால் வைக்கபட்டிருக்கும். கதவின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய ஆளுயர ஜன்னல் இருக்கும். ஜன்னல் முழுவதும் பூப்போட்ட கம்பிகள் மட்டுமே இருக்கும், கதவு கிடையாது. வாசற்படியை ஒட்டி இரண்டு பக்கமும் வீட்டின் முழு நீளத்திற்கு திண்ணை வைக்கப் பட்டிருக்கும். இரு பக்கமும் ஜன்னலுக்கு அடுத்தாற்போல, இரண்டிரண்டு விளக்கு மாடங்கள் இருக்கும். பெரிய கட்டிட வேலைப்பாடு எல்லாம் கிடையாது என்றாலும், நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும். அந்த வீட்டோட சிறப்பே அந்த பெரிய திண்ணை தான். நாங்க பொதுவா வீட்டுக்குள்ள இருக்கறத விட இந்த திண்ணையில தான் அதிகமா புழங்கி இருப்போம். யாராவது ஒரம்பரை (விருந்தினர்) வந்தா கூட நாற்காலியெல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க, டக்குனு திண்ணையில ஏறி உட்கார்ந்துடுவாங்க.
வீட்டுக்கு முன்புறம் பெரிய மண் வாசல் இருக்கும், அடிக்கடி எங்க ஆயா மாட்டு சாணத்த தண்ணியில குழம்பு போல கரைச்சு வாசல வழிப்பாங்க. அது ரொம்ப கஷ்டமான இடுப்பொடியற வேலை. பெரிய வாசல முழுதுக்கும் வழிச்சுட்டு, சிலசமயம் முடியாம திண்ணையில படுத்துப்பாங்க, நான் தான் அப்போதைக்கு ஆயாவோட iodex, jandu balm  எல்லாம். குப்புற படுத்து, என்னை ஏறி மிதிக்க சொல்வாங்க. நங்கு நங்குன்னு நான் மிதிக்கற மிதியில, எங்க ஆயாவுக்கு வலி குறையுதோ இல்லையோ, எனக்கு நல்லா கால் வலி எடுத்துடும்.
ராத்திரி ஆனா எல்லாரும் வாசல்ல நிலா வெளிச்சத்துல வரிசையா ஆளுக்கொரு கட்டில போட்டு கதை பேசிகிட்டே படுத்திருப்போம். நானும் ஆயாவும் பாதி நேரம் வரைக்கும் கதை பேசிட்டே இருப்போம். அவங்க சின்ன புள்ளையா இருந்தப்போ இருந்து ஆரம்பிச்சு அவங்க கடைசி காலம் வரைக்கும் நடந்த அத்தனை கதைகளையும் சொல்வாங்க. நிலா வெளிச்சத்துல நச்சத்திரங்கள என்னிகிட்டே ஹாயா கதை கேட்டுகிட்டே தூங்கின அந்த காலம் திரும்பவும் கிடைக்குமான்னு தெரியல.
எங்க ஆயா சின்னதுல இருந்தே சொப்புத் தயிர் வியாபாரம் பண்ணவங்க. சொப்புன்னா நம்ம வீட்டுல தண்ணீர் சோம்பு இருக்கும்ல, அது மாதிரி மண்ணுல செஞ்சது. கால்படி சொப்பு, அரைப்படி சொப்புன்னு, அளவிற்கு தகுந்தாற்போல நிறைய சொப்புகள் இருக்கும். சமையல் கட்டுக்குள்ள, நாலைஞ்சு உரியில வரிசை வரிசையா சொப்பு சட்டிங்க தொங்கிட்டிருக்கும். ஒன்னுல பால், ஒன்னுல தயிர், ஒன்னுல மோர், ஒன்னுல வெண்ணைன்னு, பார்க்கவே கலக்கலா இருக்கும். உள்ள போனாலே புது மோர், பச்சை வெண்ணை வாசனை கலவையாய் வந்து ஆளைத் தூக்கும். எனக்கும் என் கிளுஸ் பூனைக்கும் அங்கதான் வேலையே. :-)
தினமும் பொழுது விடியறதுக்குள்ள மோர் சிலுப்பி, பெரிய கூடையில அடுக்கி வெச்சு, தலையில தூக்கிட்டு, கிட்டத்தட்ட 3 மைல் தூரம் நடந்தே போய் ஊருக்குள்ள, ஒவ்வொரு வீட்டுக்கும் தயிர் ஊற்றிட்டி வருவாங்க. வரும்போது எனக்கு மறக்காம உருண்டை பன்னு (round bun) வாங்கிட்டு வருவாங்க. நான் ஒரு நாளும் பார்த்தது இல்ல அவங்க எந்நேரம் எழுந்து இத்தனை வேலையும் செய்வாங்கன்னு. இதெல்லாம் நான் ரொம்ப சின்னதா இருக்கப்போ நடந்தது, பொறவு, அத நிப்பாட்டிட்டாங்க. உருண்டை பன்னும் போச்சு :-(
என்னைக்காவது மழை வந்தா ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் மழை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரே பரபரப்பா இருக்கும். ஆடு மாடெல்லாம் மழையில நனையக் கூடாதுன்னு, கட்டுத்தரையில இருந்து எல்லாத்தையும் அவிழ்துட்டு போய் மாட்டுக் கொட்டகைக்குள் கட்டுவாங்க. நானும் என்னமோ பெருசா வேலை செய்யற மாதிரி காட்டிகிட்டு, மழையில நனைஞ்சிட்டு இருப்பேன்.
மழை நேரத்துல ஓட்டு வீட்டோட பெரிய அழகே, ஓட்டின் மேல் விழுந்த நீரெல்லாம் சேர்ந்து சிறு ஓடைப் போல கீற்றுக் கீற்றாக வரிசையாக ஊற்றுவதுதான். கொட கொடன்னு ஒரே மாதிரி நெட்டாக ஊத்தறதப் பாக்கணுமே... சான்சே இல்லங்க, அவ்வளோ அழகா இருக்கும். மண் வாசலுங்கரதால, ஓட்டுத் தண்ணி ஊற்ற ஊற்ற, அது ஊற்றுகிற இடத்தில் மண் அரித்து போய், சிறு பள்ளம் ஏற்பட்டு, ஒரு சின்ன வாய்கால் போல தண்ணி தேங்கி நிற்கும்.  மழை நின்னப்பிறகும், சொட்டு சொட்டா, தேங்கின தண்ணியில  டப் டப்ன்னு விழுந்து அலை அலையா எழும்பும். திண்ணையில உட்கார்ந்து எல்லாரும் வரக்காப்பி குடிச்சிகிட்டு, கதை பேசிகிட்டே மழையையும் ரசிச்சிட்டிருப்போம். நான் காகித கப்பல் செஞ்சு அதுல விட்டு விளையாடுவேன். மழை நின்னபிறகும் என்னோட ஆட்டம் மட்டும் நிக்காது. ஓடிப் போய் ஒவ்வொரு மரமா, செடியா, உலுக்கி குலுக்கி, இலையில தேங்கியிருக்கிற நீரெல்லாம் ஒட்டுமொத்தமா சர்ருன்னு கீழே கொட்ட வெச்சு சில்லுனு நனைவேன்.
இந்த மாதிரி ஒவ்வொரு விஷயமும் ரசனையாதான் அப்போதெல்லாம். நம்ம எல்லாருமே இப்படிதானே இருந்தோம், எல்லாமே நமக்கு கொண்டாட்டமா தானே இருந்தது அந்த வயதில், வளர வளர இதெல்லாம் எங்கே போய் மறைந்தது. வாழ்கையின் சின்னச் சின்ன சந்தோசங்களையும், ரசனைகளையும், கொண்டாட்டங்களையும் தொலைத்துவிட்டு, எதைத் தேடி ஓடுகிறோம்...????? இந்த ஓட்டம் திரும்பவும் பழைய கொண்டாட்டமாக மாறுமா...??? ஆவலுடன்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...