Wednesday, July 30, 2014

பாம்பைப் பார்த்தா கூட பயம் இல்ல, இந்த அட்டையைப் பார்த்தா தான்.... :-(

சின்ன வயசுல இருந்தே இந்த அட்டைங்களக் (அட்டைப் பூச்சி) கண்டாலே எனக்கு செம பயம். என்ன பண்ணாலும் அந்த பயம் என்ன விட்டு போகமாட்டேன்குது... :-(
இப்போவும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு, எனக்கு ஒரு அஞ்சாறு வயசு இருக்கும், எங்க தாத்தா ஆடு மாடுங்களுக்கு தல (ஆடு மாடுகள் தீனியாக சாப்பிடும் இலை, செடி, கொடி, எல்லாம் சேர்த்த கட்டு) கொண்டு வர்றதுக்கு பனங்காடுக்கு (பனங்காடு என்பது பனைமரக் காடு, சும்மா கிடக்கும் விவசாயமற்ற பனைமரங்களும் புதர்களும் மண்டிக்கிடக்கும் காடு) போனப்போ நானும் அவங்க கூட ஓடி போயிட்டேன். ஆனா காட்டுக்குள்ள போக போகத்தான் உள்ள உதற ஆரம்பிச்சது.
திரும்பி வீட்டுக்கு போகலாம்னாளும் பயம், தாத்தா கூட போலாம்னாலும் பயம், ஏன்னு கேக்கறிங்களா, எல்லாம் இந்த ஊர்ற கருப்பு அட்டைங்க பிரச்சனை தாங்க, அப்டியே பெருசா நீளமா கரு கருன்னு கொச கொசன்னு மொய்க்கற கால்களோட, மழை பெய்ஞ்ச காலத்துல, புதரு மண்டிக் கடக்குற ஓட பக்கம் (சில சமயம் வீடு கட்டுதரையில), வேலி பக்கம்லாம் மெதுவா ஊறி ஊறி எங்கயாச்சும் போயிட்டிருக்கும். ஐயோ அத பாத்துட்டா அன்னைக்கு நாள் பூரா, கால கீழ வைக்கவே பயப்படுவேன். என் மேலேயே ஊர்ற மாதிரி ரொம்ப அருவருப்பா இருக்கும்.
தாத்தா வேலியில தல வெட்ட ஆரம்பிச்சிட்டாரு, எனக்குன்னா ஏதோ நெருப்பு மேல நிக்கற மாதிரி உயிர கையில புடிச்சிட்டு நின்னுட்டிருந்தேன். கொஞ்சம் கூட இறக்கம் இல்லாம அந்த இடத்துல எந்த பக்கம் இருந்தோ அந்த கரு கரு வில்லன் நெளிஞ்சி நெளிஞ்சி வந்தான் (பத்து அடி முன்னாலதாங்க...). அவ்ளோதான் அங்க எடுத்த ஓட்டம் தான், கால்ல செருப்பு கூட இல்லாம... கல்லு முள்ளு எதும் தெரியல (கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருக்கும்), அத்துவிட்ட மாடு மாதிரி (ஏதோ எல்லா அட்டைகளும் சேர்ந்து என்னத் தொரத்துற மாதிரி ஒரு கற்பனைல) ஓடியாந்து வீட்டு வாசப்படி ஏறித்தான் நின்னேன்.அப்புறம் தான் வலி தெரிஞ்சுது ரெண்டு கால்கள்ளையும்  பூரா முள்ளு குத்தி குத்தி ஒடிஞ்சு சிலாம்பா (ஒடிந்த முள் துணுக்கு) நின்னு போச்சு, பத்தாததுக்கு முழங்கால் வரைக்கும் கீறல்கள். அதுக்கு வேற முதுகுல நாலு வெச்சி, அன்னைக்கு பூரா முள்லெடுக்கி (முள் எடுக்க) வெச்சி குத்தி குத்தி எடுத்தாங்க. செம வலி... :-(
இன்னைக்கு அத நெனச்சா, அடச்சீ..., இதுக்கா இப்படி ஓடினோம்னு சிரிப்பு வருது, ஆனா அந்த வயசுல அது எனக்கு என்னமோ உயிர பறிக்கற விஷயமாத்தான் தோணுச்சி. யாராவது கேட்டா பாம்ப பாத்தாக் கூட பயப்படமாட்டேன் (?! :-) ), இந்த அட்டைய பாத்தாதான் உதறுதும்பேன்.
இதுல கஷ்டம் என்னன்னா நான் அட்டைக்கு பயபடுறேன்னு, ஒவ்வொரு வாட்டியும் நான் எதாவது குறும்பு பண்ணா, அடம் பண்ணா உடனே, அட்டைய புடிச்சி வந்து கட்டிடுவேன்னு பயமுறுத்துவாங்க எங்க அண்ணனுங்க.
நல்ல வெவரம் தெரிஞ்ச பெறகும் அந்த பயம் என்ன விட்டு போகல. ஊருல இருக்க வரைக்கும் மழை பேஞ்சா எங்க வயக்காட்டுப் பக்கம் கூட போகமாட்டேன், எங்கயாவது ஒன்னு ஊறிக்கிட்டு வந்து என் கண்ணுல பட்டுடுமோன்னு பயமா இருக்கும். இங்க அமெரிக்கா வந்த பிறகு கூட புல்வெளில நடக்குறப்போ என்ன அறியாம எங்கயாச்சும் அட்டை இருக்குமோனு பாத்துப்பேன்.
அந்த ஆழமான அட்டை பயம் (போபியா??? ) எப்படி வந்துச்சின்னு யோசிச்சுப்பாத்தா, அதுக்கான ஒரு சம்பவம் நியாபகத்துக்கு வந்துச்சு. ரொம்ப சின்ன புள்ளையா இருக்கப்போ ஒரு நாள் தாத்தா யாருகூடயோ (யாருன்னு சரியா இப்போ நியாபகம் வர மாட்டேன்றது, ஆனா அவங்க மட்டும் கையில கெடச்ச்ச்ச்ச்சா......... ;-( ) பெசிட்டிருந்தாங்க. தாத்தாகிட்ட அவங்களுக்கு ஏற்பட்ட, அட்டை ரத்தம் உறிஞ்சின experience பத்தி சொல்லிட்டிருந்தாங்க. அவங்க எங்கயோ போயிருந்தப்போ, மலை அட்டை ஒன்னு அவங்க கால்ல ஓட்டை போட்டு உள்ள போயிருச்சாம், அப்டியே கொடஞ்சிட்டே உள்ளே போக பயங்கரமா வலி எடுத்துடுச்சாம், அப்புறம் யாரோ சொன்னாங்கன்னு புகையிலை கசக்கி அந்த ஓட்டைக்குள்ள துணிக்க, அந்தக் காரத்துக்கு அட்டை வெளிய வந்துடுச்சாம். இத சொன்ன அவங்க கூட அப்போவே அத மறந்திருப்பாங்க,  ஆனா அங்க சும்மா கூட நின்னு கேட்டுக்கிட்டிருந்த எனக்கு அது அப்படியே மனசுக்குள்ள பதிஞ்சி போச்சு. இப்போ அத யோசிச்சா கூட அப்டியே "visual"-ஆ வந்து கண்ணுக்குள்ள நிக்குது, ஏதோ அட்டை என் கால்ல ஓட்டை போட்டு ரத்தம் உரியற மாதிரி...
இப்போ எனக்கு நல்லாவே தெரியும், அந்த மாதிரி இரத்த உறிஞ்சி அட்டையும் இருக்குன்னு, ஆனா நம்ம வாழற பகுதியில, மழை சமயத்துல தோன்றுகிற அட்டைகள் மிக சாதுக்கள் என்று. அது நம்மல ஒண்ணுமே பண்ணாதுன்னு (நம்ம அத எதும் பண்ணாம இருந்தா போதும்) நல்லாவே தெரியும், ஆனாலும் என்னால அந்த பயத்த overcome பண்ணி வர முடியல.
இந்த மாதிரி எல்லார்க்குள்ளும் ஏதாவது ஒரு பயம் சின்ன வயசுல உருவாகி இருக்கும் (கரப்பான் பூச்சிக்கு, பல்லிக்கு, பலூன்/பட்டாசு சத்தத்துக்கு, இருட்டுக்கு, சிலருக்கு தேங்கி இருக்கும் தண்ணிய பாத்தா கூட பயம் வரும்) , அதைய நம்ம வீட்ல இருக்கவங்க, திரும்ப திரும்ப (விளையாட்டுக்கு தான்) சொல்லி பயமுறுத்தி இருப்பாங்க. எவ்வளோ வயதானாலும் அந்த பயம் நம்மள விட்டுப் போகாது.

இத எதுக்கு இப்போ சொல்றேன்னா, நம்ம குழந்தைகள பக்கத்துல வெச்சுகிட்டு எப்பவும் எதுக்காகவும் எந்த ஒரு sensitive விஷயங்களையும் பேசவே கூடாது. நமக்கு ரொம்ப சாதரணமா தெரியற விஷயம் அவங்களுக்கு ரொம்ப பெரிய, பயமுறுத்துற விஷயமா தெரியலாம்.
குழந்தைங்க எதுக்கு பயப்படுறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு அந்த பயத்த போக்கறதுக்கு முயற்சி பண்ணணும். எக்காரணத்தை கொண்டும் அத சொல்லி குழந்தைகளை மிரட்டாதிங்க. ஏன்னா... சின்ன வயசுல ஏற்படுற இது போன்ற சில பயங்கள் நம்ம வாழ்க்கை முழுதுக்குமே நம்மல விட்டுப் போகாது. so... தெரியாம கூட அதை என்னைக்குமே நம்ம குழந்தைகள் மனசுல விதைச்சுட கூடாது... அப்படியே குழந்தைங்க எதுக்காவது ரொம்ப பயந்தாங்கன்னா, அந்த பயத்தை களைய வேண்டிய பொறுப்பும் நம்முடையதுதான்... இது அட்வைஸ் இல்லைங்க என்னோட kind request...!

2 comments:

  1. சின்ன வயதில் நமக்கு ஏற்படும் பயம் தெளிய பல காலம் ஆகிறது. சில பயங்கள் எத்தனை காலம் ஆனாலும் தெளிவதில்லை.

    நமது பிள்ளைகளுக்கு ஏற்படும் பயம் இன்று நமக்கு சாதாரணமாகத் தோன்றினாலும் அவற்றை களைவது நம் கடமை.

    இங்கும் நான் காட்டுப் பகுதிகளில் அட்டைப் பூச்சிகளை பார்த்திருக்கிறேன். மழை பெய்தால் அவை வெளியில் வருகின்றன.

    இதோ இந்த இணைப்பை பாருங்கள்.

    Snake and Leech


    நல்லதோர் பகிர்வு சரண்யா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்க கொடுத்த லிங்க் பார்த்தேன் தமிழ்....
      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.... :-)

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...