Showing posts with label கொஞ்சம் கதை பேசலாம். Show all posts
Showing posts with label கொஞ்சம் கதை பேசலாம். Show all posts

Wednesday, March 11, 2015

பிரின்சிபால் மேடம் !

ரொம்ப நாள் ஆச்சு, ஜாலியா ஒரு போஸ்ட் போட்டு... அதான் இன்னைக்கு பாதி தூக்கத்துலேயே எழுந்து ஒரு முக்கியமான விஷயத்தோட கலமிறங்கிட்டேன்...!
என்னடா புள்ள முக்கியமான விஷயம்ன்னு சொல்லுதே, இப்படி பில்ட் அப் பண்ற அளவுக்கு என்னடா விஷயம்ன்னு தான யோசிக்கிறிங்க.
அதாவது... நான்... இன்னைக்கு... எங்க ஊரு ஸ்கூலுக்கே  "பிரின்சிபாலா" பதவி ஏத்துகிட்டேன்.
எப்படிடா இது? அம்மணிக்கு அம்புட்டு அறிவா? எப்படி சாதியம்ன்னு தான வியக்குறிங்க!.
நடந்தத அப்படியே சொல்றேன் கேளுங்க...
இன்னைக்கு காலையில எங்க primary schoolலுக்கு போயிருக்கேன் (ஆனா நான் எதுக்காக, எப்படி, எங்க பள்ளிக்கூடத்துக்கு போனேன்னு இன்னும் சரியா விளங்க மாட்டேன்குது). நிறையா டீச்சர்ஸ் எல்லாம் ஆங்காங்கே நின்னு ஏதேதோ பேசிட்டிருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு நான் HM (Head Master) ரூம எட்டிப் பாக்கறேன், திடிர்ன்னு என்னைக் கூப்பிட்டு "நீங்கதான் இனிமே இந்த ஸ்கூல control பண்ண போறீங்க, இன்னியில இருந்து நீங்கதான் நம்ம ஸ்கூலுக்கு பிரின்சிபால்"ன்னு சொல்றார். நான் அப்படியே "ஷாக்" ஆய்ட்டேன்.
ரூம விட்டு வெளிய வந்து குட்டி குட்டி புள்ளைங்களப் பாக்கறேன், என்னைப் பார்த்து அப்படியே சின்னதா smile பண்ணுதுங்க. அப்புறம், கொஞ்ச நேரத்துல புள்ளைங்க எல்லாரும் ஒரு பெரிய ஹால்ல கூடி இருக்காங்க, என்னைப்  பிரின்சிபாலா எல்லோருக்கும் stage ல announce பண்ணப் போறாங்களாம் !?
மேடையில நம்மல எதாவது பேச சொல்வாங்களோ?? யோசிச்சிட்டே ஓரமாப் போய் ஒத்திகை பாக்கறேன்.
மேடையில பேரை அறிவிச்சதும் மைக்கை கையில பிடிக்கறேன். எல்லோரும் புதுப் பிரின்சிபால் "அமெரிக்கன் இங்கிலீஷ்ல" பேசப் போறாங்களோன்னு, என் முகத்தையே பாக்கறாங்க. கதையில இங்கதான்  வைக்கறேன் ட்விஸ்ட். அப்படியே அழகானத் "தமிழ்"ல பேச ஆரம்பிக்கிறேன்.
எடுத்ததும் "என்னடா பிள்ளைகளா, புது பிரின்சிபால் எப்படி இருப்பாங்களோன்னு பயப்படுறிங்களா ?"ன்னு கேட்டுக்கு தஸ்ஸு புஸ்ஸுன்னு ஏதேதோ பேசறேன் (சூப்பரா தாங்க பேசினேன், இப்ப எழுதறப்போ பேசின dialog எல்லாம் மறந்து போச்சு. :-( ).
கடைசியா யாருமே பேசாத அளவுக்கு சூப்பர் "பஞ்ச்" ஒன்னு பேசறன் பாருங்க... அப்படியொரு கைத்தட்டல் !!
"பெத்தவங்க எதுக்காகத் தெரியுமா பசங்கள இவ்வளோ செலவுப் பண்ணி படிக்க வைக்கறாங்க? அவங்க நல்லா இருக்கணுமுன்னா? சொல்லுங்க... பசங்களோட வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னுதான. நீங்க படிச்சா உங்க வாழ்க்கைதான் மாறும். மேலே ஏறும். உங்க பெத்தவங்க எதிர் பாக்கறது கடைசி காலத்துல நீங்க போடுற கொஞ்ச சோறு! அவ்ளோதான்."
(இதத்தான் (இதல்லாம் ஒரு பஞ்ச்ன்னு...)  நான் பேசினேனான்னு எனக்கே இப்ப சந்தேகமா இருக்குங்க (பவர் ஸ்டார் கூட இவ்ளோ கேவலமான ஒரு பஞ்ச பேசி இருக்கமாட்டார்). இதுக்கா அப்படி கைத்தட்டினாங்க?! நல்லவேலை! சின்னப் பசங்கன்றதுனால, புரியாம, பாவம் கைத்தட்டலன்னா நாளைக்கு "மேடம்" (நான்தான் ! ) அடிப்பாங்களோன்னு நினைச்சி கைய தட்டிபுட்டாங்க போல!? )
அதுக்கு மேல என்ன நடந்துச்சி, நான் அந்த stageஅ விட்டு இறங்கினேனா (அதுவும் அப்படி ஒரு பஞ்ச பேசிட்டு...), பிரின்சிபாலா இருந்து சாதாரண ஸ்கூல CBSC (இன்டர்நேஷனல் லெவல்) ஸ்கூலா மாத்தினேனான்னு தெரியறதுக்குள்ள, என் வாண்டுப் பையன் "வீல் வீல்"ன்னு கத்தி வெச்சி, என் பிரின்சிபால் கனவுக்கு வேட்டு வெச்சிட்டான். :-(
என் பிரின்சிபால் கனவு நனவாகறதுக்கு முன்னாடியே, கத்தி அழுது, என் பொன்னான கனவைக் கலைச்ச இவனுக்கெல்லாம், என்னை மாதிரியே ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் "பிரின்சிபாலா" வரனும், வெச்சு வெளுவெளுன்னு வெளுக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு, அடுத்ததா "டாக்டர் சரண்யாவா, இல்ல IAS சரண்யாவா"ன்னு  என் மூளை இப்போ discussion ல இறங்கி இருக்குது. என்ன இப்ப, ரெண்டுமே நமக்கு ரொம்ப சுலபம் தான !! :-)
சரிங்க மறுபடியும், அடுத்த போஸ்ட்ல பாக்கலாம். (தயவு செய்து அடுத்த போஸ்டாவது, இப்படி மொக்க போடாம, ஒழுங்கா எதாவது உருப்படியா போடும்மான்னு நீங்க கடுப்பாவறது என் காதுல கேக்குது, விடுங்க விடுங்க, நான் என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...) :-)

Tuesday, December 16, 2014

நாங்கல்லாம் கார் ஓட்டினா... episode - 2

சீட்ல ஏறி உட்கார்ந்தேன். எப்படியும் அந்த ஆன்ட்டி, அவங்கள இன்ட்ரோ பண்ணிக்கிட்டு கொஞ்சம் நேரம் எதாவது பேசுவாங்கன்னு பார்த்தா, எடுத்த எடுப்பிலேயே, சீட் கம்போர்ட்டா இருக்கான்னு கேட்டுட்டு, "can u find the break and gas?" ன்னு கிளாஸ ஆரம்பிச்சுட்டாங்க. பேசிகிட்டே கொஞ்சம் ஜாலியா ஒப்பி அடிக்கலாம்னு நினைச்சிருந்தேன். கொஞ்ச நேரம் எதுவும் புரியாம, அப்புறம் குனிந்து பார்த்து, "yes yes"ன்னு தலைய நல்லா ஆட்டிட்டு, ரெண்டு காலையும் தூக்கி, "பிரேக்"ல ஒரு காலையும்,  "accelerator (gas)"ல ஒரு காலையும் (அதுல எது பிரேக், எது காஸ்ன்னு வேற அப்போ தெரியல) வைத்துக் கொண்டு, "ya its perfect"ன்னேன்,  சின்ன ஸ்மைலோட (smile :-) ), ரொம்ப கரெக்டா பண்ணிட்ட மாதிரி. அவங்க எட்டி பார்த்து ஷாக் ஆகி, "No no, u should use only the right leg for both"ன்னாங்க. பாவம், அவங்களால வேற என்ன சொல்ல முடியும், இப்பதான் புரிஞ்சிருக்கும் எனக்கு கார் பத்தி எந்த அளவுக்கு தெரிந்திருக்கும்ன்னு. அப்புறம் indicator எப்படி போடணும், gear எப்படி மாத்தனும்ன்னு ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு சொல்லிக் கொடுத்தாங்க. பெறவு, டப்புன்னு "press the break and start the car"ன்னுடாங்க.ஸ்டார்ட் த காரா? கீழையும் மேலையும் குனிஞ்சி நிமிர்ந்து தேடி பார்க்கறேன், கார எதுலங்க ஸ்டார்ட் பண்றது, அத சொன்னாதான தெரியும் :-(. கொஞ்ச நேரம் நான் தடுமாறரத பார்த்துட்டு அவங்களே சாவிய திருப்பி கார ஸ்டார்ட் பண்ணிடாங்க. அப்பா, ஒரு வழியா, சாவி போடுற இடத்த, என் CBI மூளையை use பண்ணி கண்டுபிடிச்சிட்டேன். :-)
இப்போ லேசா பிரேக்ல இருந்து கால எடுன்னாங்க. கார் லைட்டா move ஆக ஆரம்பிச்சது. ஹை, அதுக்குள்ள சூப்பரா கார் ஓட்ட  ஆரம்பிச்சிடோமேன்னு சந்தோசத்துல், ஸ்டீரிங்க பிடிக்க மறந்துட்டேன். எப்டியும் ஒரு கையில அந்த ஆன்ட்டி ஸ்டேரிங்க பிடிசிருந்தாங்க, அதனால பிரச்சனை இல்லை. ஸ்ஸப்பா இப்போவே நமக்கு கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சே... இந்த கார் ஓட்டுறதுல இவ்ளோ கஷ்டம் இருக்கும்ன்னு முன்னையே தெரியாம போய்டுச்சுங்க. பிரேக்க கவனிச்சா, ரோட்ட கவனிக்க முடியல. ரோட்ட கவனிச்சா, எது பிரேக், எது ஆச்செலரேட்டர்ன்னு மறந்து போயிடுது. முடியலடா சாமி, எப்படா என்ன திரும்ப வீட்டுக்கு விடுவாங்கன்னு, பள்ளிகூடத்து புள்ள மாதிரி பீல் பண்ண வெச்சிடாங்க, கார எடுத்த ஐஞ்சு நிமிஷத்துலயே...!!! ;-(
எப்படியோ ஒரு அரைமணி நேரத்துக்கு அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா, இந்த indicator எங்க எங்க போடணும்; பிரேக், காஸ், ரெண்டுக்குமான வித்யாசம்; சிக்னல்ல எப்படி நிறுத்தறதுன்னு மெதுவா புரிய ஆரம்பிச்சது. ஆனாலும், முக்கியமான அந்த "ஸ்டேரிங் கண்ட்ரோல்" மட்டும் இப்போ வரைக்கும் புடிபட  மாட்டேன்குது. அன்னைக்கு ஒரு ரெண்டு மணி நேரம் இப்படியே ஓட்ட விட்டாங்க! U-turns போட கத்துக் கொடுத்தாங்க, ஆனாலும், இன்னும் நாம எதையுமே ஒழுங்கா கத்துக்கல. எல்லாத்தையும் ஒரே நாள்ல கத்துகிட்டா, பாவம், இந்த driving school வெச்சு நடத்துறவங்க எல்லாரும், எப்படி பொழைக்கறதுன்ற நல்ல என்னத்துல, பொறுமையா கத்துக்கலாம்ன்னு விட்டுட்டேன்.
ரொம்ப லென்த்தா போகுதா? சரி சரி... இத்தோடு முடிச்சிக்கறேன்... நானும் போய் "ஒரே நாளில் கார் கற்றுக்கொள்வது எப்படி"ன்ற புத்தகத்த படிச்சு, ஒரே பாட்டுல ரஜினி பணக்காரர் ஆகுற மாதிரி, இந்த blogger சரண்யா, ஒரே நாள்ல கார் கத்துக்கிட்டு... கத்துக்கிட்டு... வேற என்னங்க பண்ணப் போறோம், நானும் என் பையனும் ஜாலியா ஊற சுத்துவோம் (ரிஸ்க் எடுக்குறதெல்லாம் சஞ்சு குட்டிக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி!!!).  இதுக்குமேல என்ன சொல்ல... அடுத்த க்ளாஸ் போயிட்டு வந்து, நடக்கப் போற ரணகளத்த,  குதுகலமா சொல்றேன்.... Bye... :-)
பின்குறிப்பு: என்னடா, எபிசொட் கணக்கெல்லாம் போட்டு எழுதி இருக்கே இந்த பொண்ணு, ஒரு வேலை, வாரக் கணக்குல, மாசக் கணக்குல போகுமோன்னு மலைச்சு போய்ட்டிங்களா? உங்களுக்கு கதை சொல்லி, கதை எழுதி ஒரு "பெரிய" கதாசிரியர் (Novelist!!? ) ஆகனும்ன்னு "பிளான்" எல்லாம் போட்டு வெச்சிருக்கேன் :-). so... ப்ளீஸ்... படிச்சிட்டு உங்க feedbacks சொல்லுங்க... தேங்க்ஸ்!

Monday, November 10, 2014

ஞாயிற்று கிழமை வந்தாலே...

அப்போதெல்லாம் ஞாயிற்று கிழமை வந்தாலே செம குஷியா இருக்கும். பள்ளிக்கூடம் லீவுன்றது ஒரு பக்கம் இருந்தாலும் பொண்டு பொடுசுங்க எல்லாம் சேர்ந்து குதித்தாளம் போடலாமே, அதுதான் முக்கியமானது. ஒன்னு நாம பக்கத்து வீட்ல இருப்போம், அல்லது அவங்க நம்ம வீட்ல இருப்பாங்க. இல்லன்னா நானும் வேலை செய்யறேன்னு எதாவது எடுபுடி வேலை செஞ்சிட்டிருப்போம் (அது கூட ஒரு செம entertainment-தாங்க).
அப்போல்லாம் வாசல்ல மண் அடுப்பு கூட்டி தான் சோறு பொங்குவாங்க. பொதுவா நாங்க வளர்க்கற கோழிச் சேவலுங்கள்ள ஒன்ன புடிச்சி, அடிச்சி, தென்னஞ்சோவையை பற்ற வெச்சு, அடிச்ச சேவல வாட்டுவாங்க. சேவலோட பொங்கு முடி பொசுங்கும்போது வரும் கருகு வாடை காற்றோடு கலந்து மூக்கில் ஏறும். வாட்டின பொறவு மஞ்சத் தூள் போட்டு நல்லா கழுவி எடுப்பாங்க. அது வரைக்கும் எங்க தாத்தா பின்னாலேயே நின்னுகிட்டு, குளிருக்கு கைய கட்டியிருப்பாங்களே, அது மாதிரி குறுக்கால கட்டிக்கிட்டு, குறு குறுன்னு கோழியையே கண்ணெடுக்காம பார்த்துட்டிருப்பேன். "கண்ணு, போயி மஞ்சப்பொடி டப்பாவ எடுத்துக்கிட்டு வா"ன்னு சொன்னா போதும், குடு குடுன்னு ஓடி போய், கீழ பாதி மேல பாதின்னு கொட்டிகிட்டு கொண்டு வருவேன் (அதுக்கு ஒரு திட்டு விழுந்தாலும், அதையெல்லாம் யாரு காதுல வாங்குனது..!? :-)). அவ்வளவு அவசரம், நாம வர்றதுக்குள்ள எதாவது பண்ணிடுவாங்களோன்னு (class-அ மிஸ் பண்ணிட கூடாதுல்ல). அப்புறம் என்னை சேவலோட கழுத்த தூக்கி பிடிக்க சொல்லுவாங்க. பெருசு பெருசா ரெண்டு வாழை இலை அறுத்து வந்து, ஒன்னோடு ஒன்னு சேர்த்தது போல போட்டு, அது மேல கறி நறுக்குற கட்டைய வெச்சு, அந்த கட்ட மேல சேவல வெச்சு, அதுக்குன்னே இருக்கற பெரிய கொடுவாள்ல நறுக் நறுக்குன்னு வெட்டித் தனித் தனியா குவிச்சு வைப்பாங்க. 
இதோட நம்ம வேலை முடிஞ்சுது. அதுக்கப்புறம் இந்த சமையல் section பக்கமெல்லாம் நாம எட்டி கூட பார்க்கமாட்டோம் (அது வேற department ! ;-)). எங்க, அத எடுத்துட்டு வா, இத நுணுக்கிட்டு வான்னு, கூப்பிட்டுருவாங்கலோன்னு பம்பிகிட்டே நிப்பேன். அப்போன்னுதான், கரெக்டா எங்க அண்ணன கூப்பிட்டு, "டேய், போயி சின்னத் தென்ன மரத்துல ஒரு எளந்தேங்கா பறிச்சிட்டு வா"ன்னு சொல்வாங்க. இந்த சான்ஸ நாம விடுவமா, அவன் சரின்னு தலைய ஆட்டுறதுக்குள்ள  நான் கீழ் தென்ன மட்டைய பிடிச்சிட்டு தொங்கிட்டிருப்பேன், மரம் ஏர்றதுக்கு. 
எங்க அம்மா ஒரு காயின்னு சொன்னா, நான் எப்படியும் ரெண்டு மூணு காயாவது பிடுங்கி போட்டு, தூக்க முடியாம தூக்கிட்டு போவேன். "எதுக்கு புள்ள இத்தன தேங்கா"ன்னு ஷாக்-ல வாயடைச்சு நிப்பாங்க. அப்புறம் எப்படியும் ஒரு ரெண்டு காய உரிச்சு, ஒடச்சு, தண்ணிய புல்லா குடிச்சிட்டு, அம்மா இந்தா தேங்கான்னு கொடுப்பேன். அதுக்குள்ள, அங்க பெரிய குண்டாவுல குழம்பு ரெடியா கொதிச்சிட்டிருக்கும். குழம்பு குடிக்கறவங்க வாங்கன்னு எங்கம்மா கூப்பிடுறதுக்குள்ள, நாங்கல்லாம் பெர்பெக்டா, அடுப்ப சுத்தி ஆஜர் ஆகிடுவோம். 
உடைச்ச தேங்காவுல இருக்கற பருப்ப நோண்டி தனியா எடுத்துட்டு, ஆளுக்கொரு தொட்டிய (தேங்காய் ஓட்டினை தென்னந்தோட்டின்னு பேச்சுவழக்குல சொல்வோம்) கையில கொடுத்து, அதுல குழம்பு ஊற்றுவாங்க. (அது ரசத்தின் தடிப்பில் இருக்கும், குழம்பிற்கு தேங்காய் அரைத்து விடும் முன்பு, மசாலா பொருட்களில் வெந்த நீர், கொஞ்சம் காரமாக, சூப்பராக இருக்கும்). யாருக்கு அதிகமா இருக்குன்னு அதுக்கொரு சண்டை வரும் அப்போ. எப்படியும் எனக்கு தான் அதிகமா இருக்கும், இருந்தாலும், ஒவ்வொருத்தரோட தொட்டியையும் செக் பண்ணி பார்த்துட்டு தான், நாங்க குடிப்போமுல்ல!. எப்படியும் ஒரு ரெண்டு வாய் குடிச்சிட்டு, சுடுது, கார்க்குதுன்னு, எங்க அம்மகிட்டயோ, சித்திகிட்டயோ கொடுத்துட்டு ஓடிடுவேன். அதுக்கு இவ்வளவு பில்டப்பு...!!!
அதுக்கப்புறம் எப்படியும் சாப்பாடு ரெடி ஆக மதியான நேரம் ஆகிடும்.
நல்லா சாப்பிட்டுட்டு, எல்லாரும் வெப்ப மரத்தடியில் கயித்துக் கட்டில போட்டு, உட்கார்ந்து கதை பேசிட்டிருப்பாங்க. நான் நல்ல கதை கேட்டுகிட்டே என்னோட ஆட்டுக்குட்டிக்கு பேன் பார்த்துட்டிருப்பேன் (!! :-) ). அப்புறம் சாயங்காலம் இருட்டுற வரைக்கும் பிஸியா "வேலை?" பார்த்துட்டு, அடுத்த நாள் பள்ளிகூடம் போகணும்கிற நெனப்புல, எப்போடா அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரும்ன்னு நினைச்சிட்டே homework பண்ணிட்டு படிக்க ஆரம்பிச்சிடுவேன் (நம்புங்க மக்களா, நாங்களும் படிச்சோமுள்ள !!! ).

Wednesday, September 17, 2014

கொஞ்சம் கதை பேசலாம் - 3

இன்னைக்கு இங்கே செம மழை... நினெச்சே பார்க்கல இந்த ஊருல இப்படி ஒரு மழைய பார்ப்போம்ன்னு. இந்த ரெண்டு நாளா அடிச்ச வெயிலுக்கு இன்னைக்கு மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிடுச்சி. கை விரல் முழுகுற அளவுக்கு வெளியில தண்ணி தேங்கி இருக்குன்னா பார்த்துகோங்களேன். இந்த மாதிரி மழைய பார்த்து பல வருஷங்கள் ஆச்சு.
என் பையன் ஓடி ஓடி வாசப்படிகிட்ட நின்னு தேங்கி ஓடுற மழைத் தண்ணிய பாக்கறதும், லேசான சாரல் பட்டு சிலிர்கறதும், திருட்டுத் தனமா இறங்கி விளையாட முயற்சிக்கறதும், இடி இடிச்சா ஓடி வந்து கட்டி பிடிச்சிக்கறதும், திரும்பவும் ஓடிப் போய் "rain rain go away..." ன்னு பாடறதும்... ப்பா...! ஏதோ செம ஜாலி படம் பார்த்த மாதிரி இருக்கு. இங்க வந்து இந்த ஒன்றறை வருஷத்துல இந்த மாதிரி சல சலன்னு கொட்டுற மழைய பார்க்கவே இல்லை (feeling !!!). எப்போவாவது லேசா தலை காட்டிட்டு (அதும் correctஆ weekend morning-ஆ பார்த்து) போற மழை இன்னைக்குதான் நல்லா தலையை ஆட்டியிருக்கு. ஆமாங்க, அடிச்ச காத்துல பாதி மரங்கள்ல இலை தலையையே காணோம். பாதி மரங்கள் ரோட்ல தான் கிடக்குது.
தேங்கின மழைத் தண்ணிய பார்த்ததும் பெரிய இவ மாதிரி வாடா கப்பல் விடலாம்ன்னு, news paper ல கப்பல் செய்ய try பண்ணி, எப்படி செய்யறதுன்னு மறந்து போய் ஒழுங்கா வராம, பேப்பர கசக்கி உருட்டி, இந்தாடா கப்பல்ன்னு கொடுத்தேன் ( !! ). நான் அந்த கப்பல ( !? ) செய்து முடிக்கற வரைக்கும், கப்பல் கப்பல்ன்னு கத்திக்கிட்திருந்தவன், அத கையில வாங்கியதும் "இது boll" ன்னு (ball அ  எப்போவும் ஐயா boll ன்னு தான் சொல்லுவாரு - அமெரிக்கன் இங்கிலிபிஷ்) என் மேலேயே எறிஞ்சிட்டு போய்ட்டான் (அச்சச்சோ பையன் வளர்ந்துட்டான் !!! ). இனிமேட்டு நோ ஏமாத்துபயிங்.... :-(
இந்த ஊரே (San Diego) பள்ளத்தாக்குகளில் தான் அமைந்துள்ளது. அதுவும் நிறைய இடத்தில் மலை உச்சி முகடுகளை சமன் படுத்தி apartments அல்லது தனி வீடுகள் கட்டியிருப்பார்கள். சின்னச் சின்ன மலைகளும் அதன் சரிவுகளும், ஆங்காங்கே இருக்கும் தொடர் வீடுகளும் (எல்லா வீடுகளுக்குமே பொதுவாக ஒரே மாதிரி கண்ணை உறுத்தாத வெளிர் நிறம்தான் கொடுத்திருப்பார்கள்),  புதிதாக பார்பவர்களுக்கு கொள்ளை அழகு. ஆனால் அவ்வளவு அழகையும் கோடை வெயிலால் காய்ந்த செடிகளும், புதர்களும், சருகுகளும் மறைத்து ஏதோ வனாந்திரம் போலத்தான் இருந்தது. இந்த மழைக்கு இனி ஊரே பார்க்க செளுசெளுப்பா இருக்கப் போகுது, மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் பசுமையாப் பார்த்தாதானே சூப்பரா இருக்கும். இன்னும் இரண்டு வாரங்களில் மழைத்துளி பட்ட மலைகளில் எல்லாம் பச்சை கோர்த்து எங்கும் சில் சில்லுன்னு இருக்கப் போகுது. மழையே அழகுதான், அதுவும் மழை பொழிந்த பிறகு பசுமை படர்ந்த இயற்கை மிக மிக அழகு... அப்புறம் ஒவ்வொரு weekend -ம் பச்சை பசேல்ன்னு தெரியற இடங்கள கிளிக் பண்ண ஜாலியா கிளம்பிடுவோம். :-)
மழை விட்டதும் "அம்மா தண்ணி போச் தண்ணி போச்..." ன்னு மேலே வானத்தை கை காட்டினான் சஞ்சு குட்டி. இனிமே "rain rain where did you go/ sanjay wants to play with you/ come again very soon/ to give us the happy boon"ன்னு பாட கத்துக் கொடுக்கணும்...!

Friday, August 22, 2014

கொஞ்சம் கதை பேசலாம் - 2

மழைக் காளானும் குமுட்டியும்

நல்ல மழை பெய்தால் வரப்பு ஓரங்களில் மொட்டு மொட்டாக காளான்கள் முளைக்கும். மழைப் பெய்த அடுத்த இரண்டு மூன்று நாட்களில், ஈரம் காய்வதற்கு முன்னே, கொஞ்சம் மேடான வரப்போரங்களில், ஓடைக் கரையில், வாய்க்கால் பகுதிகளில், ஒன்று இரண்டு காளான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, முட்டிக் கொண்டு வரும். அது முளைத்த அன்றே பறித்தால் தான் உண்டு, இல்லையென்றால், விரிந்து,  புழு வந்து அழுகிவிடும். அதனால், மழை பெய்த அடுத்தடுத்த  நாட்களில், காலையில் எழுந்ததும் முதல் வேலையே இந்த காளான் வேட்டை தான். வரப்பு, வாய்கால்ன்னு சுத்தி அலைஞ்சு, எங்காவது காளான் முளைச்சிருக்கான்னு பார்ப்பேன். நான்தான் அப்படின்னு நினைச்சுடாதிங்க, எங்க வீட்ல எல்லாருமே அப்பப்போ தேடி பிடிச்சு, காளான்கள் கொண்டு வருவாங்க.  நிறைய காளான்கள் கிடைத்தால், நல்லா உப்பு ஓரப்பா காளான் குழம்பு வெச்சுத் தருவாங்க. சூப்பரா இருக்கும். ஒன்னு ரெண்டுன்னா, இரும்புக் கரண்டியில ஒடச்சுப் போட்டு வணக்கிக் (வதக்கி) தருவாங்க. இப்போ பட்டன் காளான் வாங்கி சமைக்கற ஒவ்வொரு முறையும், ஆசை ஆசையா அலைஞ்சு திரிஞ்சு வரப்பு வாய்க்கால்ன்னு தேடித் தேடி, காளான் கொண்டு வந்தது தான் நியாபகம் வரும். அது என்னமோ தெரியல, அப்போ சாப்பிட்ட காளான் குழம்பு  தான் இப்போ வரைக்கும் ஆஹா ஓஹோன்னு சொல்ல வைக்குது.
அப்புறம் குமுட்டி செடிங்க... குமுட்டிக் கீரை பேரைக் கூட இப்போதைய தலைமுறை பிள்ளைகள் கேட்டிருக்க மாட்டாங்க. இதுவும் மழை காலத்தில் மட்டுமே முளைக்கும். அதுவும் நீர் பாசனம் அல்லாத மேட்டுகாட்டு நிலத்தில் தான் அதிகம் முளைக்கும். எங்க அம்மா சீலைத் தலைப்புல பை மாதிரி முடிந்து, அதுலதான், அப்படியே பச்சை பசேல்ன்னு இளசா இருக்க கொழுந்துக் கீரையா பார்த்து பார்த்து பறிச்சிட்டு வருவோம். குமுட்டி, பண்ணைக் கீரை பறிக்கறதுக்குன்னே ஒரு gang சுத்திக்கிட்டிருக்கும். எங்க வீட்டுல அப்போல்லாம் கம்பஞ்சோரும் குமுட்டிக் கடைசளும் தான் காம்போ (combo). சும்மா சொல்லக்கூடாது, அம்புட்டு ருசியா இருக்கும்.
இப்பொல்லாம் மழையும் சரியா பெய்யறது இல்ல, காளானும், குமுட்டியும் முளைக்கறதே இல்ல. காட்டு நிலங்கள்ள பூச்சு மருந்த தெளிச்சு தெளிச்சு, கொஞ்ச கொஞ்சமா இயற்கையை கொன்னுக்கிட்டு இருக்கோம். பத்தாததுக்கு இந்த gadget-டுகல்...
குமுட்டி (மண்) அடுப்பில் சமைத்து, குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து, வாழை இலை போட்டு, அரட்டை அடிச்சிட்டே சாப்பிட்டு, ஒரு சின்ன விஷேசம்னா கூட கோழி அடிச்சு குழம்பு வெச்சு, எல்லாருமா சேர்ந்து கலகலன்னு, சந்தோசத்த கொண்டாடின காலம் போய், 24/7 gadgets -சோடு புழங்கி, மொபைலும், tab-ம், லப் டாப்பும் தான், நம் குடும்பமாக மாறி, சாப்பிடும்போதும் தூங்கும்போதும் கூடவே இருந்து, நம் சந்தோசத்தையும் துக்கத்தையும் தீர்மானிக்கும், உணர்வுமாகி நம்மை இயக்கும் நிலை வந்துவிட்டது. மனிதனுக்கும் மனிதனுக்குமான பேச்சும், உறவும் குறைந்து போய், மனிதனுக்கும் மெசினுக்குமான உறவு பலப்பட்டு விட்டது.
இப்படியே போனால் நம் பிள்ளைகளுக்கு உறவினர்களும், உறவுகளும் என்னவென்றே தெரியாது, புரியாது போய்விடும்.
இப்போதே தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, மாமா, என எல்லா உறவுகளையும் "skype"-ல் தான் காட்டி சொல்லிக் கொடுக்கிறோம். ஆடு மாடு, கோழி என எல்லாவற்றையும் கார்ட்டூனாக மட்டுமே காட்டுகிறோம். இந்நிலை தொடர்ந்தால், அம்மா-அப்பாவைக் கூட வெறும் "gadget" ஆக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் நம் பிள்ளைகள்.
மாற்றம் என்பது நம்மிடம் இருந்துதான் வர வேண்டும். பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, இனி நம் உறவுகளுக்கு கொடுப்போம். 
சுற்றமும் நட்பும் சூழ இயற்கையோடு ஒன்றி இனிதாக வாழ முயற்சிப்போம். 

Thursday, August 14, 2014

கொஞ்ச நேரம் கதை பேசலாம்...

திண்ணைப் பேச்சு 

எங்கள் தாத்தா வீடு அந்த காலத்தில் கட்டிய பழைய ஓட்டு வீடு. நெட்டாக நான்கு அறைகள் இருக்கும். நடுவிலிருக்கும் ஹாலை "பட்டா சாலை" என்று அழைப்போம். பட்டாசாலைக்குள் நுழைய இரண்டு வாசற்படி வைத்து, அடுத்தார் போல கதவோடு கூடிய மர  நிலவுக்கால் வைக்கபட்டிருக்கும். கதவின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய ஆளுயர ஜன்னல் இருக்கும். ஜன்னல் முழுவதும் பூப்போட்ட கம்பிகள் மட்டுமே இருக்கும், கதவு கிடையாது. வாசற்படியை ஒட்டி இரண்டு பக்கமும் வீட்டின் முழு நீளத்திற்கு திண்ணை வைக்கப் பட்டிருக்கும். இரு பக்கமும் ஜன்னலுக்கு அடுத்தாற்போல, இரண்டிரண்டு விளக்கு மாடங்கள் இருக்கும். பெரிய கட்டிட வேலைப்பாடு எல்லாம் கிடையாது என்றாலும், நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும். அந்த வீட்டோட சிறப்பே அந்த பெரிய திண்ணை தான். நாங்க பொதுவா வீட்டுக்குள்ள இருக்கறத விட இந்த திண்ணையில தான் அதிகமா புழங்கி இருப்போம். யாராவது ஒரம்பரை (விருந்தினர்) வந்தா கூட நாற்காலியெல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க, டக்குனு திண்ணையில ஏறி உட்கார்ந்துடுவாங்க.
வீட்டுக்கு முன்புறம் பெரிய மண் வாசல் இருக்கும், அடிக்கடி எங்க ஆயா மாட்டு சாணத்த தண்ணியில குழம்பு போல கரைச்சு வாசல வழிப்பாங்க. அது ரொம்ப கஷ்டமான இடுப்பொடியற வேலை. பெரிய வாசல முழுதுக்கும் வழிச்சுட்டு, சிலசமயம் முடியாம திண்ணையில படுத்துப்பாங்க, நான் தான் அப்போதைக்கு ஆயாவோட iodex, jandu balm  எல்லாம். குப்புற படுத்து, என்னை ஏறி மிதிக்க சொல்வாங்க. நங்கு நங்குன்னு நான் மிதிக்கற மிதியில, எங்க ஆயாவுக்கு வலி குறையுதோ இல்லையோ, எனக்கு நல்லா கால் வலி எடுத்துடும்.
ராத்திரி ஆனா எல்லாரும் வாசல்ல நிலா வெளிச்சத்துல வரிசையா ஆளுக்கொரு கட்டில போட்டு கதை பேசிகிட்டே படுத்திருப்போம். நானும் ஆயாவும் பாதி நேரம் வரைக்கும் கதை பேசிட்டே இருப்போம். அவங்க சின்ன புள்ளையா இருந்தப்போ இருந்து ஆரம்பிச்சு அவங்க கடைசி காலம் வரைக்கும் நடந்த அத்தனை கதைகளையும் சொல்வாங்க. நிலா வெளிச்சத்துல நச்சத்திரங்கள என்னிகிட்டே ஹாயா கதை கேட்டுகிட்டே தூங்கின அந்த காலம் திரும்பவும் கிடைக்குமான்னு தெரியல.
எங்க ஆயா சின்னதுல இருந்தே சொப்புத் தயிர் வியாபாரம் பண்ணவங்க. சொப்புன்னா நம்ம வீட்டுல தண்ணீர் சோம்பு இருக்கும்ல, அது மாதிரி மண்ணுல செஞ்சது. கால்படி சொப்பு, அரைப்படி சொப்புன்னு, அளவிற்கு தகுந்தாற்போல நிறைய சொப்புகள் இருக்கும். சமையல் கட்டுக்குள்ள, நாலைஞ்சு உரியில வரிசை வரிசையா சொப்பு சட்டிங்க தொங்கிட்டிருக்கும். ஒன்னுல பால், ஒன்னுல தயிர், ஒன்னுல மோர், ஒன்னுல வெண்ணைன்னு, பார்க்கவே கலக்கலா இருக்கும். உள்ள போனாலே புது மோர், பச்சை வெண்ணை வாசனை கலவையாய் வந்து ஆளைத் தூக்கும். எனக்கும் என் கிளுஸ் பூனைக்கும் அங்கதான் வேலையே. :-)
தினமும் பொழுது விடியறதுக்குள்ள மோர் சிலுப்பி, பெரிய கூடையில அடுக்கி வெச்சு, தலையில தூக்கிட்டு, கிட்டத்தட்ட 3 மைல் தூரம் நடந்தே போய் ஊருக்குள்ள, ஒவ்வொரு வீட்டுக்கும் தயிர் ஊற்றிட்டி வருவாங்க. வரும்போது எனக்கு மறக்காம உருண்டை பன்னு (round bun) வாங்கிட்டு வருவாங்க. நான் ஒரு நாளும் பார்த்தது இல்ல அவங்க எந்நேரம் எழுந்து இத்தனை வேலையும் செய்வாங்கன்னு. இதெல்லாம் நான் ரொம்ப சின்னதா இருக்கப்போ நடந்தது, பொறவு, அத நிப்பாட்டிட்டாங்க. உருண்டை பன்னும் போச்சு :-(
என்னைக்காவது மழை வந்தா ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் மழை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரே பரபரப்பா இருக்கும். ஆடு மாடெல்லாம் மழையில நனையக் கூடாதுன்னு, கட்டுத்தரையில இருந்து எல்லாத்தையும் அவிழ்துட்டு போய் மாட்டுக் கொட்டகைக்குள் கட்டுவாங்க. நானும் என்னமோ பெருசா வேலை செய்யற மாதிரி காட்டிகிட்டு, மழையில நனைஞ்சிட்டு இருப்பேன்.
மழை நேரத்துல ஓட்டு வீட்டோட பெரிய அழகே, ஓட்டின் மேல் விழுந்த நீரெல்லாம் சேர்ந்து சிறு ஓடைப் போல கீற்றுக் கீற்றாக வரிசையாக ஊற்றுவதுதான். கொட கொடன்னு ஒரே மாதிரி நெட்டாக ஊத்தறதப் பாக்கணுமே... சான்சே இல்லங்க, அவ்வளோ அழகா இருக்கும். மண் வாசலுங்கரதால, ஓட்டுத் தண்ணி ஊற்ற ஊற்ற, அது ஊற்றுகிற இடத்தில் மண் அரித்து போய், சிறு பள்ளம் ஏற்பட்டு, ஒரு சின்ன வாய்கால் போல தண்ணி தேங்கி நிற்கும்.  மழை நின்னப்பிறகும், சொட்டு சொட்டா, தேங்கின தண்ணியில  டப் டப்ன்னு விழுந்து அலை அலையா எழும்பும். திண்ணையில உட்கார்ந்து எல்லாரும் வரக்காப்பி குடிச்சிகிட்டு, கதை பேசிகிட்டே மழையையும் ரசிச்சிட்டிருப்போம். நான் காகித கப்பல் செஞ்சு அதுல விட்டு விளையாடுவேன். மழை நின்னபிறகும் என்னோட ஆட்டம் மட்டும் நிக்காது. ஓடிப் போய் ஒவ்வொரு மரமா, செடியா, உலுக்கி குலுக்கி, இலையில தேங்கியிருக்கிற நீரெல்லாம் ஒட்டுமொத்தமா சர்ருன்னு கீழே கொட்ட வெச்சு சில்லுனு நனைவேன்.
இந்த மாதிரி ஒவ்வொரு விஷயமும் ரசனையாதான் அப்போதெல்லாம். நம்ம எல்லாருமே இப்படிதானே இருந்தோம், எல்லாமே நமக்கு கொண்டாட்டமா தானே இருந்தது அந்த வயதில், வளர வளர இதெல்லாம் எங்கே போய் மறைந்தது. வாழ்கையின் சின்னச் சின்ன சந்தோசங்களையும், ரசனைகளையும், கொண்டாட்டங்களையும் தொலைத்துவிட்டு, எதைத் தேடி ஓடுகிறோம்...????? இந்த ஓட்டம் திரும்பவும் பழைய கொண்டாட்டமாக மாறுமா...??? ஆவலுடன்...
Related Posts Plugin for WordPress, Blogger...