Wednesday, March 11, 2015

பிரின்சிபால் மேடம் !

ரொம்ப நாள் ஆச்சு, ஜாலியா ஒரு போஸ்ட் போட்டு... அதான் இன்னைக்கு பாதி தூக்கத்துலேயே எழுந்து ஒரு முக்கியமான விஷயத்தோட கலமிறங்கிட்டேன்...!
என்னடா புள்ள முக்கியமான விஷயம்ன்னு சொல்லுதே, இப்படி பில்ட் அப் பண்ற அளவுக்கு என்னடா விஷயம்ன்னு தான யோசிக்கிறிங்க.
அதாவது... நான்... இன்னைக்கு... எங்க ஊரு ஸ்கூலுக்கே  "பிரின்சிபாலா" பதவி ஏத்துகிட்டேன்.
எப்படிடா இது? அம்மணிக்கு அம்புட்டு அறிவா? எப்படி சாதியம்ன்னு தான வியக்குறிங்க!.
நடந்தத அப்படியே சொல்றேன் கேளுங்க...
இன்னைக்கு காலையில எங்க primary schoolலுக்கு போயிருக்கேன் (ஆனா நான் எதுக்காக, எப்படி, எங்க பள்ளிக்கூடத்துக்கு போனேன்னு இன்னும் சரியா விளங்க மாட்டேன்குது). நிறையா டீச்சர்ஸ் எல்லாம் ஆங்காங்கே நின்னு ஏதேதோ பேசிட்டிருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு நான் HM (Head Master) ரூம எட்டிப் பாக்கறேன், திடிர்ன்னு என்னைக் கூப்பிட்டு "நீங்கதான் இனிமே இந்த ஸ்கூல control பண்ண போறீங்க, இன்னியில இருந்து நீங்கதான் நம்ம ஸ்கூலுக்கு பிரின்சிபால்"ன்னு சொல்றார். நான் அப்படியே "ஷாக்" ஆய்ட்டேன்.
ரூம விட்டு வெளிய வந்து குட்டி குட்டி புள்ளைங்களப் பாக்கறேன், என்னைப் பார்த்து அப்படியே சின்னதா smile பண்ணுதுங்க. அப்புறம், கொஞ்ச நேரத்துல புள்ளைங்க எல்லாரும் ஒரு பெரிய ஹால்ல கூடி இருக்காங்க, என்னைப்  பிரின்சிபாலா எல்லோருக்கும் stage ல announce பண்ணப் போறாங்களாம் !?
மேடையில நம்மல எதாவது பேச சொல்வாங்களோ?? யோசிச்சிட்டே ஓரமாப் போய் ஒத்திகை பாக்கறேன்.
மேடையில பேரை அறிவிச்சதும் மைக்கை கையில பிடிக்கறேன். எல்லோரும் புதுப் பிரின்சிபால் "அமெரிக்கன் இங்கிலீஷ்ல" பேசப் போறாங்களோன்னு, என் முகத்தையே பாக்கறாங்க. கதையில இங்கதான்  வைக்கறேன் ட்விஸ்ட். அப்படியே அழகானத் "தமிழ்"ல பேச ஆரம்பிக்கிறேன்.
எடுத்ததும் "என்னடா பிள்ளைகளா, புது பிரின்சிபால் எப்படி இருப்பாங்களோன்னு பயப்படுறிங்களா ?"ன்னு கேட்டுக்கு தஸ்ஸு புஸ்ஸுன்னு ஏதேதோ பேசறேன் (சூப்பரா தாங்க பேசினேன், இப்ப எழுதறப்போ பேசின dialog எல்லாம் மறந்து போச்சு. :-( ).
கடைசியா யாருமே பேசாத அளவுக்கு சூப்பர் "பஞ்ச்" ஒன்னு பேசறன் பாருங்க... அப்படியொரு கைத்தட்டல் !!
"பெத்தவங்க எதுக்காகத் தெரியுமா பசங்கள இவ்வளோ செலவுப் பண்ணி படிக்க வைக்கறாங்க? அவங்க நல்லா இருக்கணுமுன்னா? சொல்லுங்க... பசங்களோட வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னுதான. நீங்க படிச்சா உங்க வாழ்க்கைதான் மாறும். மேலே ஏறும். உங்க பெத்தவங்க எதிர் பாக்கறது கடைசி காலத்துல நீங்க போடுற கொஞ்ச சோறு! அவ்ளோதான்."
(இதத்தான் (இதல்லாம் ஒரு பஞ்ச்ன்னு...)  நான் பேசினேனான்னு எனக்கே இப்ப சந்தேகமா இருக்குங்க (பவர் ஸ்டார் கூட இவ்ளோ கேவலமான ஒரு பஞ்ச பேசி இருக்கமாட்டார்). இதுக்கா அப்படி கைத்தட்டினாங்க?! நல்லவேலை! சின்னப் பசங்கன்றதுனால, புரியாம, பாவம் கைத்தட்டலன்னா நாளைக்கு "மேடம்" (நான்தான் ! ) அடிப்பாங்களோன்னு நினைச்சி கைய தட்டிபுட்டாங்க போல!? )
அதுக்கு மேல என்ன நடந்துச்சி, நான் அந்த stageஅ விட்டு இறங்கினேனா (அதுவும் அப்படி ஒரு பஞ்ச பேசிட்டு...), பிரின்சிபாலா இருந்து சாதாரண ஸ்கூல CBSC (இன்டர்நேஷனல் லெவல்) ஸ்கூலா மாத்தினேனான்னு தெரியறதுக்குள்ள, என் வாண்டுப் பையன் "வீல் வீல்"ன்னு கத்தி வெச்சி, என் பிரின்சிபால் கனவுக்கு வேட்டு வெச்சிட்டான். :-(
என் பிரின்சிபால் கனவு நனவாகறதுக்கு முன்னாடியே, கத்தி அழுது, என் பொன்னான கனவைக் கலைச்ச இவனுக்கெல்லாம், என்னை மாதிரியே ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் "பிரின்சிபாலா" வரனும், வெச்சு வெளுவெளுன்னு வெளுக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு, அடுத்ததா "டாக்டர் சரண்யாவா, இல்ல IAS சரண்யாவா"ன்னு  என் மூளை இப்போ discussion ல இறங்கி இருக்குது. என்ன இப்ப, ரெண்டுமே நமக்கு ரொம்ப சுலபம் தான !! :-)
சரிங்க மறுபடியும், அடுத்த போஸ்ட்ல பாக்கலாம். (தயவு செய்து அடுத்த போஸ்டாவது, இப்படி மொக்க போடாம, ஒழுங்கா எதாவது உருப்படியா போடும்மான்னு நீங்க கடுப்பாவறது என் காதுல கேக்குது, விடுங்க விடுங்க, நான் என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...) :-)

Wednesday, January 14, 2015

ஒரு ஹாலிவுட் கனவு - சிறுகதை

"ஏங்க, ப்ளீஸ்... அந்த லேப்டாப்ப மூடிவச்சிட்டு வந்து கொஞ்ச நேரம் எனக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணலாம்ல, இல்லைனா சஞ்சனா குட்டியையாவது பார்த்துக்குங்க... இவளையும் பார்த்துகிட்டு, வர்றவங்களுக்கு எப்படிதான் சமைக்கறது?" என்று கொஞ்சம் அழுத்துக்கொண்டே கேட்டாள் மஹா லக்ஷ்மி.
"கொஞ்சம் பொறு மஹா, நம்ம பிரண்ட்ஸ் கார்த்தியும், ரஞ்சனாவும் வந்துகிட்டிருக்கிற ஹைவேஸ் ரோடுல டிராபிக் எப்படி இருக்குன்னு பார்த்துட்டிருக்கேன். இருட்டுறதுக்குள்ள அவங்க வந்துட்டா பரவாயில்ல, இங்கே நம்ம பகுதியில, கடத்தல், கொள்ளை ரொம்ப அதிகம்ன்னு தெளிவா சொல்லியும் லேட்டா கிளம்பியிருக்காங்க பாரு" என்று கவலையோடு லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு எழுந்தான் சசி குமரன். 
அவர்கள் வசிப்பது, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு பெருநகரத்தில். பெருநகரத்தில் என்றால், அந்நகரத்தை ஒட்டி, கொஞ்சம் தள்ளியிருக்கின்ற கிராமமும் நகரமும் கலந்த ஒரு சிற்றூரில். அங்கே இருக்கும் ஒரு பெரிய மருந்துக் கம்பனியின் IT சாப்ட்வேர் துறையில், ஒரு முக்கியமான ப்ரொஜெக்டில், ஒப்பந்த அடிப்படையில் சாப்ட்வேர் இஞ்சினியராக கடந்த ஆறுமாத காலமாக வேலை பார்க்கிறான் சசி. முதன் முதலில் இன்டெர்வியுக்காக அங்கே வந்தபோதே, அந்த கம்பெனியைச் இருந்த இடத்தை சுற்றிப் பச்சை பசேல் என்று ஒருப்பக்கம் ஊசியிலைக் காடுகளும் மலைகளுமாக, மறுபக்கம், அமைந்திருக்கும் அழகான ஊருமாக, அவன் மனதை நிறைத்துவிட்டது. சாலரி பேக்கேஜும் அவன் எதிர்ப்பார்த்த மாதிரி இருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டான். உடனேயே ஒரு கூட்டுக் குடியிருப்பில் வீடு பார்த்து, மனைவியையும் குழந்தையையும் அழைத்து வந்துவிட்டான். அதே  கம்பெனியில் வேலைப் பார்க்கும் இன்னும் பலரும் (பெரும்பாலும் இந்தியர்கள்) அதே குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்ததால் எல்லோரும் நண்பர்களாகிவிட்டார்கள். ஒரு கடைக்கு போவதென்றாலும் நான்கைந்துப் பேராக சேர்ந்துதான் போய் வருவார்கள். அவர்கள் குடி வந்த புதிதில் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது.
ஆனால், இவர்களின் குடியிருப்பு ஊரின் கடைசியில் இருப்பதாலும், குடியிருப்பை ஒட்டி, முழுவதும் மலைகாட்டுப்  பகுதியாக இருப்பதாலும், சமீபகாலமாக, அப்பகுதியில் கொள்ளையர்களின் கைங்கர்யம் மிக அதிகமாக அரங்கேறிக்கொண்டிருந்தன. ஊரின் ஒதுக்குபுறம் என்பதால் போலீஸ் பாதுக்காப்பு என்பது குறைவுதான். திடீர் திடீர் என்று, இரவு நேரத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் கொள்ளையர்கள் வீடு புகுந்து, ஆட்களை சுட்டுவிட்டு, பொருட்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்கள். அதனால்,  இரவு நேரங்களில் ஆண்கள் பலரும் ஷிப்ட் போட்டு ரோந்து பார்ப்பார்கள். அப்படியும் சில சமயம், ரோந்து பார்ப்பவர்களே கூட (ஒருவர் இருவராக பிரிந்து செல்கையில்) கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டு, சிலர் உயிரையும் விட்டிருக்கிறார்கள். சசியின் ஆயுள் ரேகை கொஞ்சம் கெட்டி போல, இது வரை  எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்திருக்கிறான்.
 இப்படியெல்லாம் திகிலாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தாலும் அவ்வபொழுது மஹா, சஞ்சனா பாப்பாவுடன், அங்கங்கே நின்று, அந்த மலைகளையும் மரங்களையும், அந்த அழகான இடத்தினை போட்டோக்களாகச் சுட்டு, facebookல் ரகம்ரகமாக upload செய்ய, அதைப் பார்த்துவிட்டுதான் கார்த்தியும் ரஞ்சனாவும் இந்த ஒரு வார கால  விடுமுறையை இங்கேதான் கொண்டாட வேண்டும் என முடிவு செய்தார்கள். ஆனாலும், சசி அங்கே இருக்கும் பிரச்சனைகளைச் எடுத்துச் சொல்லிப் பார்த்தான் தான். "மச்சான், நானே அக்ரீமெண்ட் முடிஞ்சதும், சீக்கிரம் வேற வேலைப் பார்த்துக் கொண்டு வேற இடத்துக்குப் போயிடலாம்ன்னு இருக்கேன், இந்த இடம் பாதுகாப்பே இல்லாத இடம், சொல்றதக் கேளு"ன்னு எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், உண்மையறியும் ஆர்வத்தில் இருவரும் கிளம்பிவிட்டார்கள். பத்து மணி நேரப் பயணத்தில், புதிதாக வாங்கிய வெள்ளை நிற மெர்செடிஸ் பென்ஸ் காரில், பாதி தூரத்திற்கு மேல் கடந்து வந்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மதியம் மணி மூன்று. அவர்களுக்கு வழிகாட்டியான GPS கருவி, சசியின் குடியிருப்பை  அடைய, தோராயமாக 6.15 pm ஆகும் எனக் காட்டியது.
மஹா ஏதோ YouTube videos பார்த்து விதம் விதமாக சமைத்துக்கொண்டிருக்க, சசி, சஞ்சனா குட்டியை தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு நண்பரைப் பார்க்கக் கிளம்பினான். அவர்களின் குடியிருப்பு கொஞ்சம் வித்யாசமாகவும், விஸ்தாரமாகவும் இருந்தது. அப்பகுதி ஒரு பரந்து விரிந்த இடம் என்பதாலோ என்னவோ, அந்த குடியிருப்பில் இருக்கும் ஒவ்வொரு வீடும் ஒரு தனி வீடு போல, தனித்தனி கேட் அமைப்போடு கட்டியிருந்தார்கள், அத்தோடு அல்லாமல், மொத்தமாக அந்தக் குடியிருப்பைச் சுற்றி பெரிய மதில் சுவரோடுக் கூடிய இரண்டு வாயில்கள் இருந்தது. இத்தனை வாயில்கள் இருந்தும், பாதுகாப்பிற்கு ஒரு செக்யூரிட்டி இல்லாமல் போனதுதான் துரதிஷ்டவசம். இருந்த ஒரு செக்யூரிட்டியும் இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு கொள்ளைக் கும்பலால் கொல்லப்பட்டார்.
இப்போது மணி 5.30. இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டை அடைந்துவிடுவோம் என மெசேஜ் அனுப்பினாள் ரஞ்சனா.
"ஹே கார்த்தி, நிஜமாவே அந்த இடத்துல ஒரு பாதுகாப்பும் இல்லாம இத்தனைப் பேரு எப்படி வசிக்கறாங்க, ரொம்ப கஷ்டமில்லையா? ?"
"தெரியலையே ரஞ்சி, சரி விடு, எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும் அந்த புளுகு மூட்டையின் வண்டவாளம்" என்று சிரித்துக்கொண்டே, வேகத்தைக் குறைத்து, அந்த ஊருக்குச் செல்லும்  ஒற்றை வழிச்சாலையில் காரினைத் திருப்பினான்.
இன்று ரோந்து பார்க்க யார் யாரெல்லாம் செல்ல வேண்டும் என்பதுப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் சசியும் நண்பர்களும். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சிறிது நேரத்தில், அந்த அழகான வெள்ளை நிற பென்ஸ் கார் கேட்டினுள் நுழைந்து, அவர்கள் அருகே வந்து நின்றது. சசியைப் பார்த்ததும், கார்த்தியும் ரஞ்சனாவும் காரிலிருந்து இறங்கி வர, சசி, வேகமாக நடந்து வந்து கார்த்தியைக் கட்டிக்கொண்டான். "நீ வர வரைக்கும் உயிரே இல்லடா" என்றுவிட்டு, இருவரையும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக திரும்பி நண்பர்களைப் பார்த்தான். அனால், அவர்களின் பார்வையோ அந்த புதுக் காரின் மேல் அழுத்தமாக இருந்தது. அதை கவனித்துவிட்டு, கொஞ்சம் பெருமையோடு சிரித்தான் கார்த்தி.
சசியின் நண்பன் சந்துரு சசியைப் பார்த்து "டேய் சசி என்னடா இது, இருக்குற பிரசைனையில இது வேற. நீ எதையும் அவங்ககிட்ட சொல்லவே இல்லையா? புதுக்கார், அதுவும் விலை உயர்ந்த பென்ஸ் கார்ல வந்திருக்காங்க. கொள்ளக்காரங்க கண்ணுல பட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்?" என்று கேட்க, அப்போதுதான் கார்த்திக்கும் ரஞ்சனாவுக்கும் திக்கென்றது. எல்லோர் முகத்திலும் இனம் புரியாத பயம் படர்ந்தது. முதலில் இந்த காரை எப்படியாவது கொள்ளையர்கள் பார்வையிலிருந்து மறைத்து வைக்க வேண்டும் என்று, எல்லோரும் சேர்ந்து இடம் தேட ஆயத்தமாக... இங்கே நடப்பவற்றையெல்லம் மதில் சுவற்றின்அந்தப் பக்கம் இருந்து ஜீப்பில் நின்றபடி, ஆயுதம் ஏந்தியக் கொள்ளையர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்தக் கார் ஊருக்குள் நுழையும்போதே பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். இது தெரியாத நம்ம ஆட்கள், கொள்ளையர்களிடம் வசமாக மாட்டும் விதமாக, வெட்டவெளியில் காரை நிறுத்தி பேசிகொண்டிருந்திருக்கிறார்கள். இப்போது வசமாக மாட்டிக் கொண்டார்கள்.
ஒரு கொள்ளையன் துப்பாக்கியைக் குறிப்பார்க்க, அங்கே இருந்த ஒவ்வொருவரும் ஒளிந்து கொள்ள இடம் தேடி, ஒவ்வொரு பக்கமாக ஓடுகிறார்கள். துப்பாக்கிச் சூட்டின் முதல் சத்தம் கேட்டது, கூடவே ஒருவனின் "ஆ.." என்ற அலறல். பிறகு வரிசையாக துப்பாக்கிச் சூட்டின் டுமில் சத்தங்களும் "ஆ..., ஓ..." என்ற அலறல்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. கொஞ்ச நேரத்தில் சயரன் சத்தங்களும் போலீஸ் வாகனங்களும் வர ஏதேதோ கலவையான சத்தங்கள் கேட்கின்றன. காரின் பின்னால் ஒளிந்திருக்கிறான் சசி, ஒவ்வொரு நொடியும் எந்தப் பக்கமிருந்தும் குண்டு பாயலாம் என்ற அபாயகர எண்ணமும், மஹா, சஞ்சனாவின் நினைவும் மாறி மாறி அழுத்த... திடீர்யென்று, எதோ ஒருப் பக்கமிருந்து "என்னங்க..." என்று மஹாவின் அலறல் கேட்க, அலறல் வந்த திசையை திரும்பிப் பார்பதற்குள், அவனை நோக்கி சீறியது ஒரு துப்பாக்கிக் குண்டின் பாய்ச்சல்... அந்த நொடி... அசைவற்ற அந்த ஒரே ஒரு வினாடி... டுமில் என்ற சத்தம் அவன் காதருகில் தெளிவாகக் கேட்க, நெற்றிப் பொட்டில் ஏதோப் பட்டுத் தெரித்தது...   டபக்குன்னு எழுந்து உட்கார்ந்தான் சசி. நெற்றியின் மேல் சுர்ரென்று விழுந்த வேப்பம்பழக் கொட்டை கீழே உருண்டு விழுந்தது. உள்ளே அடைத்தது போல நின்றிருந்த மூச்சுக் காற்றை புஸ்ஸேன்று வெளியே விட்டான். எங்கே மஹா எங்கே எல்லோரும் என்று தேடினான். சுற்றிலும் வெப்ப மர சருகுகள் உதிர்ந்துக் கிடக்க, தன் வீட்டு வேப்பமரத்தடியில் கட்டில் மேல் அமர்ந்திருப்பது புரிந்தது. தொட்டிலில் குழந்தை ம்ம்... எனச் சிணுங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. தொட்டிலை நனைத்துவிட்டாள் போல. லேசாக சிரித்துக் கொண்டான்.
புஸ்ஸு புஸ்ஸுவென்று, தலையில பெரிய புல்லு சுமை வைத்து தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு, ரப்பர் செருப்பின் டபக் டபக் சத்தத்துடன் நடந்து வந்து மாட்டுக் கட்டுத்தரையில் பில்லு சுமையை இறக்கி போட்டுவிட்டு, "ஏங்க இவ்வளோ நேரமா தூங்குனிங்க? மணி நாலு ஆகிடுச்சி... மாடு கண்ணெல்லாம் கத்திகிட்டு கெடக்கு, எல்லாத்தையும் மாத்திக் கட்டி, சாணி வாரணும், தீவணத்தட்டு அருக்கணும், எத்தன வேல கெடக்குது?" என்றுக் கேட்டவாறே, தலைச் சீமாட்டை அவிழ்த்து உதறிவிட்டு, சேலைத் தலைப்பினில் வேர்த்து வழிந்த முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிநீர்த் தொட்டியின், கேட்வால்வு பைப்பினை திறந்துவிட்டு, உள்ளங்கையினை குவித்து, தண்ணீர் குடித்தாள்.
சசி இன்னுமும் அப்படியே உட்கார்ந்துக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் "என்னங்க..." என்ற அலறியக் குரல் இப்போதும் மனதில் எதிரொலித்துக்கொண்டிருந்தது.
லேசாக வெட்கப்பட்டு  "என்னங்க என்னையே பார்த்துகிட்டு இருக்கீங்க... எந்திரிச்சி போய் வேலையைப் பாருங்க... சாயுங்காலம் ஆகிடுச்சி பார்த்திங்கல்ல... தெனமும் ராத்திரியில நடுநிசி வரைக்கும் டிவி ஓடிகிட்டே இருக்குது. தமிழ் படம் இங்கிலீஷ் படம்ன்னு ஒண்ணுத்தையும் விடுறதில்ல, பெரிய சீமைத்துறைன்னு நினைப்பு. ம்ம்க்கும்..." என்று முகவாயை தோளில் இடித்துச் சிலுப்பிக் கொண்டு குழந்தை முளித்துவிட்டதா என்று பார்க்கப் போனாள்.
அவளுடைய அலம்பலில் சசி இப்போது வாய் விட்டுச் சிரித்தான். அவன் சிரிப்பதையே கொஞ்சம் நேரம் ஓரக் கண்ணில் பார்த்தவள், வேலைகளை உணர்ந்து வேகவேகமாக நடந்தவள் , திடீரென்று திரும்பி "எங்க கார்த்தி அண்ணனும் அண்ணியும், ஆறு மணி பஸ்சுல வந்துகிட்டுருக்காங்களாம், இந்த மாட்டு வேலையை முடிச்சிட்டு போய்க் கூட்டிகிட்டு வந்துடுங்க..." என்றுவிட்டு அடைத்து வைத்த ஆட்டுக்குட்டிகளையும், கோழிக் குஞ்சிகளையும் திறந்துவிட்டுவிட்டு அடுத்த வேலைக்குப் போனாள்.
சசி இன்னமும் அந்த ஹாலிவுட் கனவுக்குள் தன் நிஜ வாழ்க்கையோடு கலந்தவர்களைத் தேடிக்கொண்டிருந்தான். 
Related Posts Plugin for WordPress, Blogger...